×

வகுப்பறை கட்டிடத்தை திறக்க வேண்டும் கலெக்டரிடம் கிராமமக்கள் மனு

 

ராமநாதபுரம், ஜன.8: திருப்புல்லாணி அருகே இரண்டரை ஆண்டுகளாக பள்ளி வகுப்பறை கட்டிடத்தை கட்டி மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இழுத்தடிப்பதாக கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர். திருப்புல்லாணி அருகே வித்தானூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கழிப்பறை வசதியின்றி உள்ள பழைய வகுப்பறை கட்டிடத்தில் மாணவர்கள் பயின்று வருவதாகவும், புதிய வகுப்பறை கட்டிடம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் இழுத்தடிப்பதாக பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது: கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் பணிகள் முடிந்து இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இதுகுறித்து பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் 4 முறை திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மாணவர்கள் பழைய வகுப்பறை கட்டிடத்தில் பாதுகாப்பின்றி கல்வி கற்கின்றனர். கழிப்பறை வசதியும் இல்லை.

தற்போது பெரும்பாலான பணிகள் முடிந்துள்ள நிலையில் வகுப்பறைக்குள் வர்ணம் பூசுதல், அலமாரி கதவுகள் அமைத்தல், மின்சார பணிகள், மேற்கூரையின் மேல் தட்டு ஓடு பதித்தல் மற்றும் சாய்தளத்திற்கான கைப்பிடி அமைத்தல் போன்ற பணிகள் இன்னும் தொடங்கப்பட வில்லை. மேலும் புதிய வகுப்பறை கட்டிடம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே ஜன்னல், கதவுகள் பொருத்திய இடங்களில் விரிசல் ஏற்பட்டு, கதவு, ஜன்னல்கள் அடைக்க முடியவில்லை. எனவே புதிய வகுப்பறை கட்டிடத்தை முடித்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், ஸ்மார்ட் வகுப்பறை பணிகளை தொடங்கவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

 

The post வகுப்பறை கட்டிடத்தை திறக்க வேண்டும் கலெக்டரிடம் கிராமமக்கள் மனு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Thirupullani ,Panchayat Union Primary School ,Withanur ,Thirupullani… ,
× RELATED வேலு நாச்சியார் பிறந்தநாள் விழா