புதுடெல்லி: இந்தியாவில் உள்ள அனைத்து விசாரணை அமைப்புகளும் சர்வதேச போலீசை எளிதாகவும் உடனுக்குடனும் அணுக உதவும் வகையில் ‘பாரத்போல்’ போர்ட்டலை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்தியாவில் குற்றம் செய்து விட்டு பிற நாடுகளுக்கு தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிக்க இன்டர்போல் எனும் சர்வதேச போலீசாரின் உதவியை நாட வேண்டும். இதுவரை சிபிஐ மூலமாக மட்டுமே சர்வதேச போலீசை தொடர்பு கொள்ள வேண்டும்.
இதனால் தப்பி ஓடிய குற்றவாளிகளுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் விடுப்பது போன்ற நடவடிக்கைகள் அதிக நேரம் எடுத்தது. இதை தவிர்க்கும் வகையில், பாரத்போல் எனும் புதிய போர்ட்டலை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் பாரத மண்டபத்தில் நேற்று தொடங்கி வைத்தார். சிபிஐ மூலம் உருவாக்கப்பட்ட இந்த போர்ட்டல் மூலமாக காவல் துறை உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து விசாரணை அமைப்புகளும் நேரடியாக சர்வதேச போலீசை தொடர்பு கொள்ளவும். அதுவும் தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்ளவும் முடியும்.
இது தப்பி ஓடிய குற்றவாளிகளுக்கு எதிராக விரைவான விசாரணைக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவில் பேசிய அமித்ஷா, ‘‘எல்லை தாண்டிய குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் நுட்பங்களை பயன்படுத்த வேண்டிய நேரம் இது. உலகளாவிய சவால்களை கண்காணித்து நமது விசாரணை அமைப்புகளை புதுப்பிக்க வேண்டும். அதற்கான முக்கிய முயற்சியே பாரத்போல். இந்த போர்ட்டல் மூலம் இன்டர்போலில் உள்ள 195 உறுப்பு நாடுகளிடம் இருந்தும் வழக்குகள் பற்றிய தகவல்களை உடனடியாக பகிர்ந்து கொள்ளவும், தகவல்களை பெறவும் முடியும்’’ என்றார்.
The post அனைத்து விசாரணை அமைப்புகளும் இன்டர்போலை எளிதாக அணுக உதவும் ‘பாரத்போல்’: அமித்ஷா அறிமுகம் appeared first on Dinakaran.