×

பிரியங்காவின் கன்னம் போல் என்று பேசிய நிலையில் டெல்லி பெண் முதல்வர் குறித்து மீண்டும் சர்ச்சை: பாஜக வேட்பாளருக்கு பலரும் கண்டனம்

புதுடெல்லி: டெல்லி சட்டப் பேரவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரி என்பவர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் எம்பியுமான பிரியங்கா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருந்தார். தேர்தல் பிரசாரத்தின் போது, ‘டெல்லியின் கல்காஜி சாலைகளை பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போல உருவாக்குவேன்’ என்று கூறினார். இவரது பேச்சுக்கு காங்கிரஸ் மட்டுமின்றி பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அதனால் பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரி மன்னிப்பு கோரினார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் ரோகினியில் நடந்த பாஜகவின் தேர்தல் பிரசார பேரணியில் பங்கேற்ற ரமேஷ் பிதுரி, ‘டெல்லி முதல்வரான அடிஷி தனது குடும்பப்பெயரை ‘மர்லேனா’ என்பதிலிருந்து ‘சிங்’ என்று மாற்றியுள்ளார்’ என்றார்.

இவரது இந்த கருத்தும் கடும் கண்டனத்துக்கு ஆளாகி உள்ளது. கல்காஜி தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக ஆம்ஆத்மி மூத்த தலைவரான முதல்வர் அடிஷி இருந்து வருகிறார். இவர் சில காலத்திற்கு முன்பு தனது பெயருடன் குடும்பப்பெயரை சேர்த்துக் கொள்வதை தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை கருத்து குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ‘பாஜக தலைவர்களின் வெட்கமற்ற கருத்துகள், அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டன. டெல்லி முதல்வர் அடிஷி குறித்து பாஜக தலைவர்கள் அவதூறாக பேசுகிறார்கள்.

பெண் முதல்வரை அவமதிப்பதை டெல்லி மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். டெல்லி பெண்கள் அனைவரும் பாஜகவுக்கு தகுந்த பாடம் கொடுப்பார்கள்’ என்றார். முன்னதாக கடந்த சில ஆண்டுக்கு முன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தனது தேர்தல் பிரசாரத்தின் போது பீகாரின் சாலைகளை ஹேம மாலினியின் (பாஜக எம்பி மற்றும் நடிகை) கன்னங்களைப் போல மாற்றிக் காட்டுவேன் என்று வாக்குறுதி அளித்தார். இவ்வாறாக தேர்தல் பிரசாரத்தின் போது பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அரசியல் தலைவர்கள் பேசி வருவதை சமூக ஊடகங்களின் வாயிலாக பலரும் கண்டித்து வருகின்றனர்.

The post பிரியங்காவின் கன்னம் போல் என்று பேசிய நிலையில் டெல்லி பெண் முதல்வர் குறித்து மீண்டும் சர்ச்சை: பாஜக வேட்பாளருக்கு பலரும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Priyanka ,BJP ,NEW DELHI ,RAMESH BITURI ,SECRETARY GENERAL ,PRIYANKA GANDHI ,Kalkaji ,Dinakaran ,
× RELATED கல்காஜி தொகுதியில் வெற்றி பெற்றால்...