×

துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் யுஜிசி புதிய விதிக்கு ஸ்டாலின் கடும் எதிர்ப்பு: அரசியல், சட்டப்போராட்டம் நடத்தப்படும்

* கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியை பறிப்பதை வேடிக்கை பார்க்க மாட்டோம் என எச்சரிக்கை

சென்னை: பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும், பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) ‘திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் 2025’-ஐ ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார். இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு தமிழ்நாடு அமைதியாக இருக்காது. இதற்கு எதிராக சட்டரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் போராட்டத்தை தமிழ்நாடு முன்னெடுக்கும் என்று எச்சரித்துள்ளார்.

நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைக் கழகங்களிலும் துணை வேந்தர்களை நியமிப்பதில் சில மாநிலங்களில் சிக்கல் நீடித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் சில பல்கலைக் கழகங்களில் இதுவரை துணை வேந்தர்கள் நியமனங்கள் இல்லாம் காலியாக இருக்கின்றன. துணைவேந்தர்களை நியமிக்கும் விஷயத்தில் ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவிவருகின்றன.
பொதுவாக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட நாளில் இருந்தே, ஆளுநர் எப்போதும் மாநில அரசுடன் முரண்பட்டு வருகிறார். இந்நிலையில் பல்கலை துணை வேந்தர்களை நியமிப்பதிலும் ஆளுநர் மெத்தனமாக இருந்து வருவதாகவும் கூறுகின்றனர்.

காலியாக உள்ள துணை வேந்தர் பணியிடங்களில் புதிய துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இருப்பினும், துணை வேந்தரை நியமிப்பதில் பல்கலைக் கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்ற ஒரு கருத்தும் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் துணைவேந்தர்களை நியமிப்பதில் 2025ம் ஆண்டுக்கான திருத்திய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி தயாரித்துள்ளது. அதை ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

இந்த பல்கலைக் கழக மானியக் குழுவின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள், மற்றும் கல்விப் பணியாளர்கள் நியமனங்கள், பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச தகுதிகள், உயர்கல்வியில் தரங்களை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளடக்கிய ஒரு வழிகாட்டு நெறிமுறையாக இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துணை வேந்தர்களுக்கான தேர்வு முறையையும் திருத்தி அமைத்துள்ளனர். நியமனத்தில் உள்ள குழப்பங்களை நீக்கியதுடன், துணை வேந்தர்கள் நியமன விஷயத்தில் 3 பேர் கொண்ட குழுக்களை அமைக்க ஆளுநர் மற்றும் விசிட்டர்களுக்கு அதிகாரத்தையும் யுஜிசி வழங்கியுள்ளது.

அத்துடன் நில்லாமல் இந்த விதிமுறைகளை பின்பற்றி செயல்படுத்தாவிட்டால் குறிப்பிட்ட அந்த கல்வி நிறுவனம் யுஜிசி திட்டங்களில் பங்கேற்பது, பட்டப்படிப்புகளை நடத்தவும்தடை செய்யப்படும் என்று அந்த வழிகாட்டு நெறிமுறைகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மேலும், இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மீது கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. இருப்பினும், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களின் அரசுகள், துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்களுடன் முரண்பட்டுள்ளன.

மேலும் ஆளுநர் நியமித்த துணை வேந்தர்களுடனும் முரண்பட்டுள்ளன. இதுவரையில் உள்ள நடைமுறைகளின்படி அரசுகள் தேடுதல் குழுவை அமைத்து ஆளுநருக்கு அனுப்பும் போது அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவார். பின்னர் துணை வேந்தர் நியமனம் செய்யப்படுவதற்கு முன்பு அகில இந்திய அளவில் செய்திதாளில் விளம்பரம் செய்யப்படும். பொது அறிவிப்பும் செய்யப்படும். துணை வேந்தர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரும்பட்சத்தில் அவர்களின் திறமைகள் அடிப்படையில் தேடுதல் குழு நியமனம் செய்யும் என்று வரைவு விதிமுறைகள் கூறுகின்றன.

விசிட்டர்கள், ஆளுநர்கள் ஆகியோர் தான் தேடுதல் குழுவின் தலைவர்களாக இருப்பார்கள். மேலும், பல்கலைக் கழக தலைவர், யுஜிசி மற்றும் சிண்டிகேட், செனட், நிர்வாகக்குழு, மேலாண்மை வாரியம், பல்கலைக் கழகத்தின் சமமான அமைப்பு போன்ற உயர்நிலைக் குழுவின் நியமனதாரர் ஆகியோர் இந்த குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள். மாநில அமைச்சரவைகள் இந்த குழுவுக்கு ஆளுநரின் வேட்பாளரை பரிந்துரைப்பதை வழக்கமாக கொண்டிருந்தன.

ஆனால் பல மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் இந்த விதிமுறைகளை மாற்றி தங்கள் நபரை தேர்வுக்குழுவுக்கு பரிந்துரை செய்யத் தொடங்கினர். இது தான் மாநிலங்களுடன் ஆளுநர்கள் மோதல்களுக்கு வழிவகுத்தன. இந்நிலையில், யுஜிசியின் திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்த வழிகாட்டுதல்கள் உயர்கல்வியின் ஒவ்வொரு அம்சங்களிலும் புதுமை, உள்ளடக்கம், நெகிழ்வுத் தன்மை மற்றும் உத்வேகம் ஆகியவற்றை ஊக்குவிக்கும்.

ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும். கல்வித் தரத்தை வலுப்படுத்தி கல்வியில் சிறந்து விளங்குவதற்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார். இந்நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை ஆளுநரே முடிவு செய்வார் என்று யு.ஜி.சி. விதி திருத்தம் வெளியிட்டது குறித்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி நேற்று அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:

துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்களுக்கு பரந்த அதிகாரங்களை வழங்குவது மற்றும் கல்விப்புலம் சாராதோரும் துணைவேந்தேர் ஆகலாம் எனும் பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிமுறைகள் கூட்டாட்சியியல் மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரான நேரடி தாக்குதல் ஆகும். ஒன்றிய பாஜ அரசின் இந்த எதேச்சதிகார முடிவு அதிகார குவியலுக்கு வழிவகுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை சிறுமைப்படுத்துவதாக உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம்தான் கல்வி தொடர்பான அதிகாரங்கள் இருக்க வேண்டும். பாஜ அரசின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநர்கள் கைக்கு அது செல்லக்கூடாது.

தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களை நாட்டிலேயே அதிக அளவில் கொண்டுள்ள தமிழ்நாடு நமது கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது. அரசியலமைப்பு சட்டப்படி கல்வி ஒத்திசைவு பட்டியலில் உள்ளது. எனவே, தன்னிச்சையாக இந்த புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிக்கையை யு.ஜி.சி. வெளியிட்டது அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பானதாகும். இந்த வரம்புமீறிய செயலை ஏற்க முடியாது. இதற்கு எதிராக, சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் போராட்டத்தை தமிழ்நாடு முன்னெடுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்களுக்கு பரந்த அதிகாரங்களை வழங்கும் யுஜிசியின் புதிய விதிமுறைகள் மாநில உரிமைகளுக்கு எதிரான நேரடி தாக்குதல் ஆகும்.

* மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்களிடம்தான் கல்வி தொடர்பான அதிகாரங்கள் இருக்க வேண்டும்.

* பாஜ அரசின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநர்கள் கைக்கு அது செல்லக்கூடாது.

* தன்னிச்சையாக புதிய விதிமுறைகளை யு.ஜி.சி. வெளியிட்டது அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பானதாகும்.

The post துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் யுஜிசி புதிய விதிக்கு ஸ்டாலின் கடும் எதிர்ப்பு: அரசியல், சட்டப்போராட்டம் நடத்தப்படும் appeared first on Dinakaran.

Tags : Stalin ,UGC ,CHENNAI ,UNION EDUCATION ,UNIVERSITY VICE-CHANCELLORS, UNIVERSITY GRANTS COMMITTEE'S ,Minister ,Dharmendra ,Dinakaran ,
× RELATED பொங்கல் அன்று யுஜிசி நெட் தேர்வு...