×

பாஜக தலைவர் போல எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்கிறார்: தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.! அமைச்சர் ரகுபதி விமர்சனம்

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்திய நடைபயணப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதியை மறுத்துள்ளது என சொல்லியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து மதுரை – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள சிக்கம்பட்டி டோல்கேட் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் நடை பயணமாக சென்று தல்லாகுளம் மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால், சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் போராட்டகாரர்கள் திரண்டனர்.

அங்கிருந்து நடை பயணம் செல்ல முயன்ற போராட்டக்காரர்களிடம் வாகனங்களில் சென்று மத்திய தபால் நிலையத்தில் போராட்டம் நடத்துங்கள் என போலீஸ் அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், அதனை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை. அவர்களை காவல் துறை தடுத்து நிறுத்தியது. போராட்டம் நடத்த அனுமதி வழங்கிய காவல் துறை, அதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதனைதான், காவல்துறை அனுமதியை மறுத்துள்ளது’ என இட்டுக்கட்டி பொய் சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க முயலும் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் அமைதி வழியில் பேரணி மற்றும் போராட்டம் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதோடு விவசாயிகளுக்கு எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாத வண்ணம் முழுமையான பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் அதை வைத்து, தன் சுயநல அரசியல் வண்டியை ஓட்டலாம் என கழகுபோல காத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. எடப்பாடி பழனிசாமியின் வீரம் எல்லாம் அவ்வளவுதான். நாம் அவரை கோழை என்று சொன்னால் குப்புறப்படுத்து அழுவார். மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என சொன்னதோடு மட்டுமல்லாது தான் முதல்-அமைச்சராக உள்ளவரை மத்திய அரசு டங்கஸ்டன் சுரங்கம் அமைக்க விட மாட்டேன் என நெஞ்சுரத்தோடு கூறி டங்கஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானத்தையும் நிறைவேற்றினார் மு.க.ஸ்டாலின்.

ஆனால் அதிமுகவோ டங்கஸ்டன் சுரங்கம் அமைக்க காரணமான சட்ட திருத்தத்தை மத்திய அரசு மாநிலங்களவையில் கொண்டு வந்த போது வழிய சென்று ஆதரவு கொடுத்து தமிழ்நாட்டு உரிமையை மத்திய அரசின் காலடியில் வைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்தது. பழனிசாமியின் அந்த துரோகத்தை காலம் உள்ளவரை மக்கள் மறக்கமாட்டார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி மக்களை கருணையேயின்றி காக்கை குருவிகளை சுடுவது போல சுட்டுக்கொன்ற எடப்பாடி பழனிசாமி, இன்று மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசுகிறேன் என நடிப்பது கொடூர கொலைகாரன் நல்லொழுக்க வகுப்பெடுப்பதற்கு ஒப்பானது.

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த கவர்னரை கண்டிக்க துப்பில்லை, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி, வெள்ள நிவாரண நிதி என எந்த நிதியையும் ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டிக்க வக்கில்லை. துணைவேந்தர் தேடுதல் குழுவை இனி கவர்னரே நியமிப்பார் என யு.ஜி.சி கொடுத்த ஷாக் புத்தியில் ஏறவில்லை. ஆனால், எதிர்க்கட்சி தலைவர் என்ற இருப்பை காட்டிக்கொள்ள மட்டும் ஆளாய் பறக்கிறார். அதிமுகவின் பொதுச்செயலாளர் என்பதையும் மறந்து பாஜக தலைவரைப் போல எடப்பாடி பழனிசாமி நடந்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு நலனுக்காக எந்த குரலும் கொடுக்காமல் தனது அரசியல் ஆதாயத்தை மட்டுமே முதன்மையாக கொண்டு பாஜகவோடு கள்ளக் கூட்டணி வைத்து செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

The post பாஜக தலைவர் போல எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்கிறார்: தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.! அமைச்சர் ரகுபதி விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,BJP ,Tamil Nadu ,Minister ,Raghupathi ,Chennai ,Law Minister ,S. Raghupathi ,Aritapatti, Madurai… ,
× RELATED ஆளுநர் உரையை புறக்கணிக்கவில்லை...