×

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளைகள், வீரர்களுக்கு ஆன்லைன் பதிவு துவக்கம்

மதுரை: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் வீரர்கள் பதிவு ஆன்லைன் வாயிலாக இன்று தொடங்குகிறது. தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு சிறப்பானவை. இந்த ஆண்டு ஜன. 14ம் தேதி மதுரையில் உள்ள அவனியாபுரத்திலும், 15ம் தேதி பாலமேட்டிலும், 16ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க காளைகள் மற்றும் வீரர்கள் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி வீரர்கள், காளைகள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் இன்று (ஜன. 6) மாலை 5 மணி துவங்கி நாளை (ஜன. 7) மாலை 5 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மதுரை கலெக்டர் சங்கீதா கூறி இருப்பதாவது: மதுரை, அவனியாபுரத்தில் வரும் 14ம் தேதி, பாலமேட்டில் 15 மற்றும் அலங்காநல்லூரில் 16ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டில்‌ கலந்து கொள்ளும் மாடுபிடி வீர்கள் தங்கள் பெயர்களை madurai.nic.in என்ற இணைய தளம்‌ மூலம்‌ பதிவு செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கான பதிவுகளையும் இதே இணைய தளத்தில் மேற்கொள்ள வேண்டும்.

இந்த பதிவுகள் ஜனவரி 6 (இன்று) மாலை 5 மணிக்கு துவங்கி, ஜனவரி 7 (நாளை) மாலை 5 மணிக்கு நிறைவடையும். அவனியாபுரம்‌, பாலமேடு, அலங்காநல்லூர்‌ ஆகிய இடங்களில், ஏதேனும் ஒரு கிராமத்தில்‌ மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளைகளுக்கு அனுமதியளிக்கப்படும்‌. காளையுடன்‌ உரிமையாளர் மற்றும்‌ ஒரு உதவியாளர்‌ மட்டும் அனுமதிக்கப்படுவர்‌. பதிவு செய்தவர்களின்‌ சான்றுகள்‌ சரிபார்க்கப்பட்ட பிறகு, தகுதியான நபர்கள் மட்டுமே டோக்கன்‌ பதிவிறக்கம்‌ செய்ய இயலும்‌. அவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்‌. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளைகள், வீரர்களுக்கு ஆன்லைன் பதிவு துவக்கம் appeared first on Dinakaran.

Tags : AVANIAPURAM ,PALAMEDU ,ALANGANALLUR JALLIKATU BULLS ,Madurai ,Avanyapura ,Alanganallur ,Jallikatu ,Taipongal ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அமைச்சர் பங்கேற்ற விழாவில்...