×

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக சண்முகம் தேர்வு: வாச்சாத்தியில் பழங்குடி மக்களுக்காக சட்டப்போராட்டங்களை முன்னெடுத்தவர்

சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடந்து வருகிறது. மூன்றாவது நாளான நேற்று, புதிய மாநில குழு தேர்வு, மாநில கட்டுப்பாட்டு குழு தேர்வு, அகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு ஆகியவை நடந்தன. இந்நிலையில், புதிய மாநில செயலாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டு பிரிவு புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் (64) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாணவ பருவம் முதல் மார்க்சிஸ்ட் கட்சியில் செயல்பட்டு வரும் பெ.சண்முகம், தற்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக உள்ளார். தர்மபுரி வாச்சாத்தியில் பழங்குடி மக்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதலை கண்டித்து நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தவர். தமிழ்நாடு மலைவாழ் சங்கம் உள்ளிட்ட சங்கங்களிலும் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு தமிழக அரசின் அம்பேத்கர் விருதை முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து சண்முகம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தமிழ் மாநில செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் தோழர் சண்முகத்திற்கு மனமார்ந்த பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாய தோழர்களுக்காகவும் உழைத்த அவருக்கு கடந்த ஆண்டு அண்ணல் அம்பேத்கர் விருதை திமுக அரசு வழங்கியது.

அத்தகைய சிறப்புக்குரிய தோழர் சண்முகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கும், திமுக கூட்டணியின் அனைத்து வெற்றிகளுக்கும் எந்நாளும் உழைத்த தோழர் கே.பாலகிருஷ்ணனின் பணிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விடைபெற்றிருந்தாலும் மக்கள் பணிக்கு விடைகொடுக்காமல் நாளும் உழைப்பவர் தோழர் பாலகிருஷ்ணன் என்பதை நாடறியும். இரு தோழர்களும் தங்கள் பணியைத் தொய்வின்றி தொடர வாழ்த்துகிறேன் என அதில் கூறியுள்ளார். இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரும் பெ.சண்முகத் துக்கு வாழ்த்து தெரிவித் துள்ளனர்.

The post மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக சண்முகம் தேர்வு: வாச்சாத்தியில் பழங்குடி மக்களுக்காக சட்டப்போராட்டங்களை முன்னெடுத்தவர் appeared first on Dinakaran.

Tags : Shanmugam ,Communist Party of India ,Marxist ,Vachathi ,Chennai ,24th state conference ,Communist Party ,of ,India ,Villupuram ,All India Conference ,state secretary ,Communist Party of India-Marxist ,
× RELATED மின்சார கட்டணத்தை உயர்த்துவதை கைவிடக் கோரி கம்யூ., ஆர்ப்பாட்டம்