பாட்னா: பீகார் மாணவர்கள் போராட்டத்திற்கு ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகிய பெரிய தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வழிநடத்த வேண்டுமென சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தி உள்ளார். பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வினாத்தாள் கசிந்தது மற்றும் அதை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது உள்ளிட்ட விவகாரங்களை கண்டித்து ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் பாட்னா, காந்தி மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். 4வது நாளை எட்டிய இப்போராட்டத்தில் நேற்று பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: என்னை பாஜவின் பி டீம் என்கிறார்கள். எனவே, இந்த போராட்டம் அரசியல் சார்ந்தது அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இது எனது கட்சியின் சார்பில் நடத்தப்படவில்லை. இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் 51 பேர் யுவ சத்தியாகிரக சமிதி என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். அதில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன். இது மாணவர்களின் எதிர்காலத்திற்கான அவர்களின் உணர்வுப்பூர்வமான போராட்டம். இதற்கு பெரிய தலைவர்களின் ஆதரவு வேண்டும். நாடாளுன்றத்தில் 100 எம்பிக்களை கொண்ட ராகுல் காந்தி, பீகார் சட்டப்பேரவையில் 70 எம்எல்ஏக்களை கொண்ட எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆதரவளித்து போராட்டத்தை வழிநடத்த வேண்டுமென விரும்புகிறேன். அவர்களை பின்தொடர நான் தயாராக இருக்கிறேன். நான் இங்கிருப்பதை அவர்கள் ஏற்க மறுத்தால் உண்ணாவிரதத்தில் இருந்து வாபஸ் பெறவும் தயாராக இருக்கிறேன். இவ்வாறு கூறி உள்ளார்.
The post பீகார் மாணவர்கள் போராட்டத்தை ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் வழிநடத்த முன்வர வேண்டும்: சாகும் வரை உண்ணாவிரதத்தில் பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.