புதுடெல்லி: டெல்லி தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால் நலத்திட்டங்கள் நிறுத்தப்படாது என பிரதமர் மோடி உறுதி கூறினார். டெல்லியில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதில், ஆளும் ஆம் ஆத்மி, பாஜ, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில்,டெல்லி ரோகினி பகுதியில் நேற்று நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் ஆம் ஆத்மியை தாக்கி பிரதமர் மோடி பேசுகையில், ‘‘ஆம் ஆத்மி அரசு ஒன்றிய அரசுடன் மோதலில் ஈடுபட்டு ஒரு தசாப்தத்தை வீணடித்து விட்டது. டெல்லியை மக்களின் எதிர்கால நகராக மாற்றுவதற்கு மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும்.தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால் நலத்திட்டங்கள் நிறுத்தப்படாது,ஆனால் அதை செயல்படுத்துவதில் நடக்கும் ஊழல்களை களையெடுப்போம்.
டெல்லியின் ஆம் ஆத்மி ஆட்சி ஒரு பேரழிவாகும். பாஜ தான் மாற்றத்தை ஏற்படுத்தும்.பேரழிவு அகற்றப்படுவதின் மூலம்தான் வளர்ச்சிக்கான இரட்டை இன்ஜினை கொண்டுவர முடியும். ஒன்றிய அரசு டெல்லியின் சாலைகளை மேம்படுத்துகிறது. மெட்ரோ இணைப்பு விரிவாக்கம்,நமோ பாரத் விரைவு ரயில் திட்டம், பெரிய மருத்துவமனைகள் என்பது உள்பட பல திட்டங்கள் வந்துள்ளன. மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தால் குண்டும் குழியுமான சாலைகள், சாக்கடைகள் தான் கண்ணுக்கு தெரிகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த அரசு பேரழிவாக உள்ளது. இந்த முறை பேரழிவை சகித்து கொள்ள முடியாது, மாற்றத்தை கொண்டு வருவோம் என்ற மக்களின் குரல் வலுத்து வருகிறது’’ என்றார்.
The post டெல்லி பேரவை தேர்தலில் பாஜ வெற்றிபெற்றால் நலத்திட்டங்கள் நிறுத்தம் இல்லை: பிரதமர் மோடி உறுதி appeared first on Dinakaran.