மதுரை : திருநெல்வேலியில் இருந்து பெண்கள் உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்களை மதுரைக்கு அழைத்து வந்து பாஜகவினர் போராட்டம் நடத்தியது அம்பலம் ஆகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக மகளிரணி சார்பில் மதுரை செல்லத்தம்மன் கோயில் முன்பு நீதி யாத்திரை தொடக்க நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இந்த யாத்திரைக்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி பாஜகவினர் நீதி யாத்திரையை தொடங்கினர். இதையடுத்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு, பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, பாஜக மாநில மகளிரணி தலைவர் உமா ரவி உட்பட 300-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
நடிகை குஷ்பு உட்பட கைது செய்யப்பட்ட பாஜகவினர் சிம்மக்கல் பகுதியில் உள்ள ஆட்டு வியாபாரிகளுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அந்த மண்டபத்தின் ஒரு பகுதியில் ஏற்கெனவே ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.இதையடுத்து,ஆட்டுப்பட்டி அருகிலேயே தங்களை சிறை வைத்ததற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆட்டு வியாபாரிகளுடன் பாஜகவினர் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில், திருநெல்வேலியில் இருந்து பெண்கள் உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்களை மதுரைக்கு அழைத்து வந்து பாஜகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர். நெல்லையைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர் உமா, கண்ணகி வேடமிட்டு நீதி கேட்டு முழக்கமிட்ட நிலையில், போராட்டத்தின் முடிவில் போலீசார் கைது செய்தபோது கண்ணீர் விட்டார். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் சென்றுவிடலாம் எனக் கூறி அழைத்து வரப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டதால் வருத்தம் அடைந்தார்.
The post கண்ணகி வேடத்தில் ஆவேசம் – கைது செய்ததும் கண்ணீர்… நாடகக் கலைஞர்களை அழைத்து வந்து பாஜக போராட்டம் நடத்தியது அம்பலம்!! appeared first on Dinakaran.