புதுகை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நாளை 2025ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு?.. கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை: தச்சன்குறிச்சியில் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டை நாளை நடத்த அனுமதி கேட்டப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை 2ம் நாளாக கலெக்டர் இன்று ஆய்வு ெசய்கிறார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெறும். புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, தஞ்சை, நாகை, கரூர், சேலம், கோவை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிகளவில் ஜல்லிக்கட்டு நடைபெறும். இதில் காளைகள், காளையர்கள் பங்கேற்று கார், பைக் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை தட்டி செல்வர். தமிழகத்திலேயே புதுக்கோட்டையில் தான் அதிகளவில் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

ஆண்டுதோறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் தான் நடைபெறும். அதன்படி 2025ம் ஆண்டு முதல் போட்டியாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த தச்சன்குறிச்சியில் நாளை (4ம் தேதி) ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக விழாக்குழு சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து வாடிவாசல் அமைப்பது உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகளை விழாக்குழுவினர் செய்து வந்தனர். தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை புதுக்கோட்டை ஆர்டிஓ ஐஸ்வர்யா கடந்த வாரம் ஆய்வு செய்தார்.

அப்போது தெரு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்றார். அதற்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த இடத்தில் தான் ஜல்லிக்கட்டு நடத்தி வருகிறோம் என்று விழாக்குழுவினர் கூறினர். இந்தநிலையில் தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் அருணா நேற்று ஆய்வு செய்தார். வாடிவாசல், காளைகள் ஓடுதளம், காளைகளை வாடிவாசலுக்கு அழைத்து வரும் வழி, மருத்துவ குழுவினரின் இருப்பிடம் மற்றும் பார்வையாளர்களின் மாடம் போன்றவற்றை பார்வையிட்டார். மேலும் காளைகள் பாய்ந்தோடும் வழியில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டதை பார்வையிட்டார்.

அப்போது அரசின் வழிகாட்டு நெறிமுறையின்படி பேரிகார்டுகள் அமைக்கவில்லை. டபுள் பேரிகார்டு அமைக்க வேண்டும் என்று விழா குழுவினருக்கு உத்தரவிட்டார். மேலும் வாடிவாசல் அமைப்பதில் உள்ள குறைகளை விரைந்து சரி செய்ய வேண்டும். நாளை (இன்று) மீண்டும் வந்து ஆய்வு செய்வேன். அப்போது அரசின் நெறிமுறைப்படி முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்படும் என்று கூறினார். இதைதொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் முன்னேற்பாடு பணிகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். இன்று கலெக்டர் அருணா ஆய்வு செய்து அனுமதி வழங்கினால் மட்டுமே தச்சன்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.

The post புதுகை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நாளை 2025ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு?.. கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: