×

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு துவங்கியது: இன்று மாலை பேரணி, பொதுக்கூட்டம்


விழுப்புரம்: விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு இன்று துவங்கியது. இதையொட்டி மாலையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு விதியின்படி ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மாநில மாநாடு நடத்துவது என்பது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் கிளை மாநாடுகள் தொடங்கி அகில இந்திய மாநாடு வரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். தமிழகத்தில் 11,300 கிளை மாநாடுகள், 459 இடைக்கமிட்டி மாநாடுகள் (ஒன்றிய, நகர மாநாடுகள்), 41 மாவட்ட அளவில் மாநாடுகள் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், கட்சியின் 24வது மாநில மாநாடு விழுப்புரத்தில் இன்று(3ம் தேதி) தொடங்கி, 5ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை மதுரையில் நடக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் விழுப்புரம் நகரில் செய்யப்பட்டுள்ளன. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியார் தனியார் திருமண மண்டப வளாகப் பகுதியிலிருந்து இன்று மாலை செந்ெதாண்டர் பேரணி தொடங்குகிறது. காட்பாடி மேம்பாலம், மருத்துவமனை வீதி, நான்குமுனை சந்திப்பு, மாவட்ட ஆட்சியரகப் பகுதி, புதிய பேருந்து நிலையம் வழியாக செல்லும் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும் நகராட்சித் திடல் பகுதியை அடைகிறது. அதனை தொடர்ந்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசுகின்றனர்.

இந்த 3 நாள் மாநாட்டில் எதிர்காலத்தில் தமிழகத்தின் அரசியல் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும், மாநிலங்கள் மீது மத்திய அரசு தொடுத்து வரும் தாக்குதல், பேரிடர் காலங்களில் மாநிலங்களுக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யாதது, இந்துத்துவா கோட்பாட்டை எதிர்ப்பது போன்றவற்றை வலுவாக முன்னெடுத்து செல்வது குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

The post விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு துவங்கியது: இன்று மாலை பேரணி, பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : 24TH STATE CONFERENCE ,MARXIST PARTY ,VALLAPPURA ,Viluppuram ,24th State Conference of the Marxist Communist Party ,Vilupura ,Marxist Communist Party ,24th State Conference of the Marxist Party ,Villepuram ,Assembly ,Dinakaran ,
× RELATED கடலோர மாவட்டங்கள் பாதிப்பு போர்க்கால...