அதிமுக ஆட்சியில் சிறைத்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் பல லட்சம் முறைகேடு; 11 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு: சிறைத்துறை சூப்பிரெண்டு உள்பட அதிகாரிகள் வீடுகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கின


சென்னை: அதிமுக ஆட்சியின்போது சிறைத்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் பல லட்சம் முறைகேடு நடந்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை தொடர்ந்து மதுரை சிறைத்துறையில் பணியாற்றும் எஸ்பி, கூடுதல் எஸ்பி, நிர்வாக அதிகாரி மற்றும் ஒப்பந்ததாரர் உட்பட 11 பேருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கடலூர் மத்திய சிறைத்துறை எஸ்பியாக ஊர்மிளா கடந்த 10.2.2016 முதல் 27.6.2021 வரை பணியாற்றினார். தற்போது மதுரை மத்திய சிறையில் எஸ்பியாக உள்ளார். அதேபோல், பாளையங்கோட்டை சிறைத்துறை கூடுதல் எஸ்பியாக இருந்த வசந்தகண்ணன் 25.6.2019 முதல் 9.6.2021 வரை பணியாற்றி வந்தார். தற்போது மதுரை சிறை துறையில் பணியாற்றி வருகிறார். வேலூர் மத்திய சிறையில் நிர்வாக பிரிவு அதிகாரியாக தியாகராஜன் 31.7.2019 முதல் 31.3.2023 வரை பணியாற்றினர்.

தற்போது மதுரை சிறைத்துறை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணிக்காலத்தில் கடலூர், பாளையங்கோட்டை, வேலூர் மத்திய சிறைத்துறைக்கு தேவையான பேனா, பேப்பர் உள்ளிட்ட உபகரணங்கள் மொத்தமாக வாங்க மதுரை மற்றும் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனங்களில் இருந்து பல லட்சம் ரூபாய்க்கு மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டது. அப்படி கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு கமிஷனாக சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா, கூடுதல் எஸ்பி வசந்தகண்ணன், சிறைத்துறை நிர்வாக அதிகாரி தியாகராஜன் ஆகியோர் பல லட்சம் ரூபாய் பெற்றது தெரியவந்தது. அதேநேரம் கொள்முதல் செய்த உபகரணங்களும் தரம் குறைவாக இருந்தது.
அதேநேரம் மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த ஸ்டேஷனரி மற்றும் மருத்துவ பொருட்களை அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளுக்கு அனுப்பியதாக போலி ரசீது தயாரித்து ரூ.100 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக கடந்த 2021ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக இந்திய கணக்கு தணிக்கை துறை ஆய்வு மேற்கொண்டது. அதன்படி 2017-18, 2018-19 ஆகிய நிதி ஆண்டுக்கான வரவு, செலவுகளை தணிக்கை செய்யும் வகையில் மதுரை மத்திய சிறை நிர்வாகத்திடம் தணிக்கை துறை பதிவேடுகளை கோரியது. ஆனால், இந்த பதிவேடுகளை தணிக்கை துறையிடம் சிறை நிர்வாகம் வழங்கவில்லை. இந்நிலையில் பொருட்கள் தயாரிப்புக்காக ரூ.1.51 கோடி மதிப்பிலான மூல பொருட்களை விற்பனை செய்த நிறுவனங்களின் ஜி.எஸ்.டி அறிக்கைகளை தணிக்கைதுறை ஆய்வு செய்தது. இதில், அந்நிறுவனங்கள் மூலம் சிறைத்துறைக்கு மூலப்பொருட்கள் விற்பனை செய்யப்பட வில்லை என்பது தெரிந்தது. தமிழகத்தில் உள்ள 3 மத்திய சிறைகளில் கைதிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் ரூ.14.35 கோடி முறைகேடாக விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தணிக்கை துறை சுட்டிக்காட்டியது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் உரிய ஆவணங்களுடன் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உத்தரவுப்படி மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மதுரை மத்திய சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா, சிறைத்துறை கூடுதல் எஸ்பி வசந்தகண்ணன், நிர்வாக அதிகாரி தியாகராஜன் மற்றும் சிறைத்துறைக்கு தேவையான உபகரணங்களை வழங்க டெண்டர் எடுத்த தனியார் நிறுவன நிர்வாகிகள் உட்பட 11 பேர் 120(பி), 467, 468, 471, 167, 409, உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி தலைமையிலான அதிகாரிகள் இன்று காலை மதுரை சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா, கூடுதல் எஸ்பி வசந்தகண்ணன், நிர்வாக அதிகாரி தியாகராஜன்,

ஒப்பந்தம் பெற்ற நிறுவன நிர்வாகி முகமது அன்சாரி, சென்னையில் உள்ள முகமது அலி, சென்னை கொடுங்கையூரை சேர்ந்த சீனிவாசன், கொடுங்கையூரை சேர்ந்த சாந்தி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த சங்கரசுப்பு, தனலட்சுமி, வெங்கடேஸ்வரி என 11பேருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் ஒப்பந்தம் பெற்றபோது லஞ்சமாக பெற்ற பணம் குறித்த முக்கிய ஆவணங்கள் பல சிக்கியது. அதில் குறிப்பாக மதுரை சிறைத்துறை எஸ்பியாக உள்ள ஊர்மிளா வீட்டில் இருந்து வழக்கு தொடர்பாக பல ஆவணங்கள் சிக்கியது. மேலும், வங்கி கணக்குவழக்குகள் தொடர்பாக ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அதிமுக ஆட்சியில் சிறைத்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் பல லட்சம் முறைகேடு; 11 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு: சிறைத்துறை சூப்பிரெண்டு உள்பட அதிகாரிகள் வீடுகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கின appeared first on Dinakaran.

Related Stories: