மதுரை: மதுரை மத்திய சிறையில் 2016-2021 ஆண்டுகளில் போலி கணக்குகள் மூலம் சுமார் ரூ.100 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக புகாரில், சிறை வளாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கைதிகள் தயாரிக்கும் ஸ்டேஷனரி பொருட்கள், மருத்துவ உதவிப் பொருட்கள் உள்ளிட்டவை அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களுக்கு அனுப்பியது போல போலி பில்கள் தயாரிக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஊழலில் சிறைத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு எனக்கூறப்பட்ட நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தின் அனைத்து மத்திய சிறைகளிலும் 2016 – 21 வரையிலான காலத்தில் ஊழல், முறைகேடு நடந்திருப்பது தணிக்கை ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒன்பது மத்திய சிறைகள் உள்ளன. இங்கு கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை அரசு துறைகளுக்கு இலவசமாக வழங்கி சேவைதுறையாக செயல்பட்டு வருகிறது. இந்த மூன்று சிறைகளில் இருந்து மட்டும் கைதிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் எந்தெந்த அரசுத்துறை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர்.
இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் 2019 – 20, 2020 – 21 காலக்கட்டத்தில் பொருட்களை அரசு துறைகளுக்கு அனுப்பாமலும், கைதிகளுக்கு கூடுதல் சம்பளம் கொடுத்ததாகவும் உள்ள குற்றச்சாட்டிற்கு சென்னை ஐகோர்ட் கடந்தாண்டு டிச., 12ல் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இதனால் தணிக்கை ஆய்வறிக்கை அடிப்படையில் மதுரை சிறை அதிகாரிகளாக இருந்தவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து மதுரை சிறை அதிகாரிகள் மீதும், ஒப்பந்ததாரர்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சிறை கண்காணிப்பாளராக இருந்த ஊர்மிளா, ஜெயிலர் வசந்த கண்ணன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. மதுரை சிறை முறைகேடு குறித்து கடந்த டிச., 16ல் சென்னை ஐகோர்ட்டில் விசாரணை நடந்தபோது ‘லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில் திருப்தி இல்லை’ என, கருத்து தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post மதுரை மத்திய சிறையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.