சென்னை: சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் 2வது நாளாக அன்புமணி ஆலோசனை நடத்தினார். பாமகவின் இளைஞர் சங்க மாநில செயலாளராக இருந்த ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனுக்கு பிறகு அந்த பதவி நிரப்பப்படாமல் இருந்தது. இந்தநிலையில் கடந்த 28ம் தேதி நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், மகள் வழி பேரன் முகுந்தனை கட்சியின் இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். அப்போது மேடையில் இருந்த அன்புமணி, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஒரு குடும்பத்தில் எத்தனை பேருக்கு பதவி வழங்குவீர்கள்.
கட்சியில் சேர்ந்தவுடன் பதவி வழங்குவீர்களா என்றெல்லாம் கேள்வி கேட்டவர், திடீரென மைக்கை மேஜை மீது கோபமாக போட்டார். அப்போது ராமதாஸ் இது என்னுடைய கட்சி. நான் தொடங்கி, வளர்த்த கட்சி. விருப்பம் இருந்தால் கட்சியில் இருங்கள். இல்லாவிட்டால் போகலாம் என்றெல்லாம் தெரிவித்தார். இதையடுத்து கோபமாக புறப்பட்டுச் சென்ற அன்புமணி, பனையூரில் எனக்கு அலுவலகம் இருக்கிறது. அங்கு வந்து தொண்டர்கள் என்னை சந்திக்கலாம் என்று கூறிவிட்டுச் சென்றார். இதனால் பனையூரா? தைலாபுரமா? என கட்சிக்குள் கடும் புகைச்சல் எழுந்தது.
பொதுக்குழுவில் மோதல் வெடித்த நிலையில் தனது பனையூர் அலுவலகத்தில் அன்புமணி ஆலோசனை நடத்தினார். 2 நாட்களுக்கு முன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி தனியாக ஆலோசனை நடத்தினார். அன்புமணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இளைஞரணி தலைவராக முகுந்தனே தொடர்வார் என ராமதாஸ் இன்று அறிவித்தார். இந்நிலையில் னையூரில் உள்ள தனது அலுவலகத்தில் 2வது நாளாக அன்புமணி ஆலோசனை நடத்தினார். புதிய அலுவலகத்தில் 2வது நாளாக பாமக மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி ஆலோசனை நடத்தினார்.
நாளையும் நிர்வாகிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முகுந்தன் நியமனத்தில் அன்புமணி நிலைப்பாடு என்ன என்பது தற்போது வரை தெரியாத நிலை நீடிக்கிறது. முகுந்தன் நியமனத்தை அன்புமணி ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பது தெரியாத நிலை நீடிப்பதால் கட்சி நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
The post பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் 2வது நாளாக அன்புமணி ஆலோசனை appeared first on Dinakaran.