நாமக்கல், ஜன.1: நாமக்கல் மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி, 27 இடங்களில் சோதனை சாவடி அமைத்து போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விதிமீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக போக்குவரத்து போலீசார் தொடர் வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சாலைகளில் டூவீலர்களில் சாகசம் செய்யும் நபர்களை சிசிடிவி கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து அபாராதம் விதித்து வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை செய்து, சந்தேகம் அளிக்கும் வகையில் யாராவது தங்கியுள்ளார்களா என்பதை கண்காணித்தனர். மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்கள், மசூதிகள், சர்ச்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
புத்தாண்டு அமைதியாக பிறக்கவும், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பான மற்றும் விபத்து இல்லாத ஆங்கில புத்தாண்டை கொண்டாட வேண்டும். இதற்காக மாவட்ட காவல்துறை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பொது மக்களின் பாதுகாப்புக்காக, மாவட்ட முழுவதும் 800 போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைத்திற்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், செயல்படும் நபர்களை கண்டறிய, 27 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நகரின் முக்கிய இடங்களில் காவல் துறையினர் மூலம் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்து குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தவும், பட்டாசுகள் வெடிக்கவும் புத்தாண்டையொட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு தலங்களில், புத்தாண்டு தின சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொள்ளும்போது, பாதுகாப்பான முறையில் தங்களது உடைமைகளை பொதுமக்கள் வைத்துக்கொள்ள வேண்டும். டூவீலரில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்ய வேண்டும். சாலைகள் மற்றும் பொது இடங்களில் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் புத்தாண்டு தினத்தை கொண்டாட வேண்டும். இதை மீறி செயல்படும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போக்குவரத்து விதிமீறும் நபர்கள் மீது உரிய அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மது போதையில் வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும். மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். இந்த ஆண்டு விபத்து இல்லாத ஆண்டாக அமையும் வகையில், அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பொது மக்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் மகிழ்ச்சியுடன் புத்தாண்டை கொண்டாட வேண்டும். இவ்வாறு எஸ்பி ராஜேஸ்கண்ணன் தெரிவித்தார்.
The post 27 இடங்களில் சோதனை சாவடி அமைத்து போலீசார் கண்காணிப்பு appeared first on Dinakaran.