புதுச்சேரி அருகே நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்: கடல் அலையில் சிக்கிய சிறுவன் மீட்பு

 

புதுச்சேரி, ஜன. 1: புதுச்சேரி நோணாங்குப்பம் படகு குழாமில் நேற்று படகு சவாரிக்காக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. பேரடைஸ் கடற்கரையில் குளித்தபோது அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட சிறுவனை லைப் கார்டு ஊழியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் (பிடிடிசி) கட்டுப்பாட்டில் நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளது. இங்கு கடற்கரையை ஒட்டி ‘பாரடைஸ் பீச்’ உள்ளது. ஒவ்வொரு வருடமும் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு போன்ற விடுமுறை தினங்களில் பல மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் படகு குழாமில் இருந்து பாரடைஸ் பீச்சுக்கு படகு சவாரி சென்று ஆனந்த குளியல் போட்டு மகிழ்வார்கள்.

இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து புத்தாண்டு வரை தொடர்ச்சியாக விடுமுறை இருந்ததால், கடந்த ஒரு வாரமாக படகு குழாமில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதலே சுற்றுலா பயனிகள் அதிகளவில் திரண்டனர். ஆனால், ஆற்றில் நீர் மட்டம் குறைந்து கானப்பட்டதால் பெரிய படகுகள் செல்லும்போது தரைதளம் தட்டுப்பட்டதால் படகுகள் ஆற்றின் நடுப்பகுதியிலேயே நின்றது. இதையடுத்து, ஒவ்வொரு படகையும் இரண்டு ஸ்பீட் போட் மூலம் கட்டி இழுத்துச் சென்றனர்.

மேலும் நேற்று பேரடைஸ் கடற்கரையில் குளித்த வெளி மாநிலத்தை சேர்ந்த சிறுவன் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டான். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த லைப் கார்டு ஊழியர்கள் சிறுவனை மீட்டு ஆட்டோ மூலம் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தாண்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி பேரடைஸ் கடற்கரையில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கவில்லை.

மாறாக, நோணாங்குப்பம் படகு குழாமிலேயே நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, நேற்று அரியாங்குப்பம், தவளக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்கில புத்தாண்டையொட்டி 4 இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதையடுத்து, எஸ்பிக்கள் பக்தவச்சலம், மோகன்குமார் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரேசன், சண்முகசத்தியா, ஏஎஸ்ஐ சிரஞ்சீவி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post புதுச்சேரி அருகே நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்: கடல் அலையில் சிக்கிய சிறுவன் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: