திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமலைசாமி. மனைவி ஐஸ்வர்யா (28). இவர் நேற்று காலை குடும்பத்தினருடன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்களுக்கான குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்.
பின்னர் ஐஸ்வர்யா திடீரென தனது தலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அருகில் இருந்த போலீசார் அவரை தடுத்து தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.
ஐஸ்வர்யா கூறும்போது, ‘‘திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து வீடு கட்டுவதற்கு ரூ.34.50 லட்சம் கடன் வாங்கினேன். இதற்கு மாத தவணையை முறையாக கட்டிய நிலையில், கொரோனா பாதிப்பின்போது மட்டும் மூன்று மாத தவணை கட்ட இயலாமல் போனது. இருப்பினும், அந்த தொகையையும் பின்னர் செலுத்திவிட்டேன்.
தவணை முடிந்த பின்னும் பணம் தர வேண்டுமென கூறி, நிதி நிறுவனத்தினர், நாங்கள் கட்டிய வீட்டை ஜப்தி செய்துள்ளனர். அங்கிருந்து எங்களை வெளியேற்றியதால் தற்போது தெருவில் நிற்கிறோம்’’ என்றார். பின்னர் இந்த பிரச்னை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் அவர் மனு அளித்தார்.
இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் போலியமனூர் பேரூராட்சி கரட்டுப்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி முனியப்பன். இவரது மனைவி கலைவாணி. இவர் தனது 2 வயது மகளுடன் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இவரை போலீசார் தடுத்து மீட்டனர்.
அவர் கூறும்போது, ‘‘எங்கள் வீட்டின் அருகே பேரூராட்சி நிர்வாகம் ஆழ்துளை கிணற்றுடன் குடிநீர் குழாய் அமைத்துள்ளது. இதில் பலர் துணிகள், சாக்குகளை துவைப்பதால், எனது குழந்தைக்கு தொற்றுநோய் பாதிப்பு அடிக்கடி ஏற்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தீக்குளிக்க முயன்றேன்’’ என்றார்.
The post திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு பெண்கள் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.