புதுச்சேரி, டிச. 31: நாட்டிலேயே அதிக சதவீத பெண் வாக்காளர்கள் கொண்ட மாநிலமாக புதுச்சேரி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்கள் ஒவ்வொன்றிற்கும் 14 புள்ளி விவர அறிக்கைகளுடன், 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல்களுக்கான 42 புள்ளி விவர அறிக்கைகளின் விரிவான தரவு தொகுப்புகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியை பொறுத்தவரை, நாடாளுமன்ற தேர்தல் முக்கிய சிறப்பம்சங்கள், தேர்தல் செயல்முறைகள் மற்றும் முடிவுகள் பற்றிய விரிவான நுண்ணறிவுகளை உள்ளடக்கியது. அவை இப்போது ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆர்வலர்களுக்கு கிடைக்கின்றன. இந்த முன்முயற்சி பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதையும், இந்தியாவின் வலுவான தேர்தல் முறை பற்றிய புரிதலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதுச்சேரியில் நாட்டிலேயே அதிக பெண் வாக்காளர்களின் ஓட்டு 53.03சதவீத பதிவாகி, மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மிஞ்சியுள்ளனர். மக்களவை தேர்தலில், புதுச்சேரியின் மாகே சட்டமன்ற தொகுதியில் உள்ள 31 வாக்குச்சாவடிகளிலும் பெண் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிபுரிந்துள்ளனர். பாலின விகிதம் 2023ம் ஆண்டு 1127ல் இருந்து 2024ம் ஆண்டு 1130 ஆக அதிகரித்துள்ளது.
2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் 10,23,699 பேர் இடம் பெற்றிருந்தனர். 2019ல் 9,73,161 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். 2019ஐ விட 2024ல் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.19% அதிகரித்துள்ளது. 2024ல் 8,11,432 வாக்குகள் பதிவானது. 2019ல் இது 7,90,895 ஆக இருந்தது. மின்னணு வாக்குப்பதிவு மற்றும் தபால் வாக்கு பதிவு மூலம் மொத்தமாக 8,11,432 வாக்குகள் பதிவானது. இதில் 8,07, 724 வாக்குகள் மூலம் பதிவானவை. ஆண்கள்- 3,77,934 பேரும், பெண்கள் – 4,29,685 பேரும், மூன்றாம் பாலினத்தவர் – 105 பேரும் வாக்களித்தனர். தபால் மூலம் 2024ல் 3,708 வாக்குகளும், 2019ல் 643 வாக்குகளும் பதிவானது. 2019ல் 12,199 ஆக இருந்த நோட்டாவுக்கு 2024ல் 9,763 வாக்குகள் கிடைத்தன. திருநங்கைகள் (மூன்றாம் பாலினத்தவர்) 70% வாக்களித்தனர்.
2019ல் 970 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில் 2024ல் 976 வாக்குச்சாவடிகளாக அதிகரிக்கப்பட்டது. 2019ல் ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால், 2024ல் எந்த வாக்குச் சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடைபெறவில்லை. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் சராசரி எண்ணிக்கை 2024ல் 1049 ஆகவும், 2019ல் 1003 ஆகவும் உள்ளது. 2024ல் 45 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் 26 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். 2019ல் 37 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். அதில் 18 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 2024ல் 5,42,979 ஆக இருந்த பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2019ல் 5,13,799 ஆக இருந்தது. இது 5.67% அதிகரித்துள்ளது. 2024ம் ஆண்டு நாட்டிலேயே அதிக சதவீத பெண் வாக்காளர்களைக் கொண்ட மாநிலமாக புதுச்சேரி உள்ளது. 2019ல் 96 ஆக இருந்த மூன்றாம் பாலின வாக்காளர்கள் எண்ணிக்கை, 2024ல் 151 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 105 பேர் வாக்களித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post 53 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது பெண் வாக்காளர்களில் நாட்டிலேயே புதுச்சேரிக்கு முதலிடம் appeared first on Dinakaran.