×

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: மண்ணெண்ணையை ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி

ரெட்டிச்சாவடி, டிச. 31: கடலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு பெண் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க வந்திருந்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவனங்குடி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ஜனதா (57) கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்துக்கு வந்தார்.

அப்போது அவர் பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினார். பின்னர் அவரிடம் விசாரித்தபோது ஆவனங்குடியை சேர்ந்த ஒருவருக்கு ₹3.5 லட்சம் கடன் கொடுத்ததும், பின்னர் பணத்தை திரும்பக் கேட்டபோது தராமல் இழுத்தடித்து வந்ததும், இதுகுறித்து காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தீக்குளிக்க முயன்றது தெரிந்தது. இதையடுத்து ஜனதாவை காவலர்கள் புதுநகர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: மண்ணெண்ணையை ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,RETICHAWADI ,governor ,Cuddalore District Governor's Office ,Dinakaran ,
× RELATED கடலூர் கலெக்டர் அலுவலகத்தில்...