திருச்சி, டிச.31: புத்தாண்டை முன்னிட்டு திருச்சி மாநகர பாதுகாப்பு பணியில் கூடுதலாக 350 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார். திருச்சி மாநகரில் 2025ம் ஆண்டு புதுவருட பிறப்பு தினத்தை முன்னிட்டு இன்று (டிச.31) இரவு மாநகரில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாத வகையில் விரிவான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாத வகையில் அனைவரும் அமைதியான முறையில் புத்தாண்டை கொண்டாடுமாறு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, மாநகரின் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் உட்பட்ட பகுதிகளில் போலீஸ் ரோந்துகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் முக்கிய சந்திப்புகளில் 350 போலீசார் கூடுதல் பாதுகாப்பிற்காக போலீஸ் அதிகாரிகள் தலைமையில் போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவர். திருச்சி மாநகரிலுள்ள 9 சோதனைச் சாவடிகளிலும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொது இடங்களில் புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக எண்ணிக் கொண்டு பொதுமக்களை கேலி, கிண்டல் செய்வது, இடையூறு செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்திக்கொண்டு மது அருந்துதல், கேக் வெட்டுதல், பட்டாசுகள் வெடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீதும் சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு தினத்தன்றும், முதல் நாள் இரவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பைக் ரேஸில் ஈடுபட்டாலோ அல்லது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி எச்சரித்துள்ளார்.
The post சாய்ந்து கிடந்த நெற்பயிர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை: மாநகர போலீஸ் கமிஷனர் கடும் எச்சரிக்கை appeared first on Dinakaran.