×

த்ரில் போட்டியில் இந்தியா சொதப்பல்: பஞ்சர் ஆக்கிய பாக்சிங் டே டெஸ்ட்; ஆஸியிடம் மோசமான தோல்வி

மெல்போர்ன்: இந்தியாவுடனான 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 184 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் 4வது டெஸ்ட் மெல்போர்னில் ‘பாக்சிங் டே’ போட்டியாக, டிச. 26ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 474 ரன் குவிக்க, இந்தியா 369 ரன் சேர்த்தது. தொடர்ந்து, 105 ரன் முன்னிலையுடன் ஆஸி 2வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணி 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 82 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன் சேர்த்தது.

இதையடுத்து, 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. நாதன் லயன் 41, ஸ்காட் பொலண்ட் 10 ரன்னுடன் பேட்டிங்கை தொடர்ந்தனர். கூடுதலாக 1.4 ஓவர் விளையாடிய நிலையில், லயன் மேலும் ரன் எடுக்காமல் அவுட்டானதால், ஆஸியின் 2வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அப்போது அந்த அணியின் ஸ்கோர், 83.4 ஓவரில் 234. இந்தியா தரப்பில் பும்ரா 5, சிராஜ் 3, ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 92 ஓவரில் 340 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 2வது இன்னிங்சை ஆடியது.

கேப்டன் ரோகித், ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஆஸி பந்து வீச்சில் திணறிய ரோகித் 40 பந்துகளில் 9 ரன் எடுத்து பாட் கம்மின்ஸிடம் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, ராகுல் 0, விராட் கோஹ்லி 5, ரிஷப் பண்ட் 30, ரவீந்திர ஜடேஜா 2, நிதிஷ் குமார் 1, என சொற்ப ரன்களில் அவுட்டாகி நடையை கட்டினர். அணியின் ஸ்கோர் 140 ஆக இருந்தபோது, மூத்த வீரர்களுக்கு பாடம் எடுக்கும் வகையில், 84 ரன்னுடன் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஜெய்ஸ்வாலுக்கு கம்மின்ஸ் வீசிய பந்து கேட்ச் ஆனதாக 3வது அம்பயர் அவுட் தந்தார். இது பெரும் சர்ச்சையை எழுப்பியது. அப்போது, இந்தியா 70.5 ஓவரில் 7விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்திருந்தது.

வெற்றி வாய்ப்பு கை நழுவிப் போனாலும், மேலும் 21.1 ஓவரை கடந்தால் டிரா செய்யலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் ஆகாஷ் தீப் 7, பும்ரா, சிராஜ் ரன் எடுக்காமல் டக் அவுட்டாக, 79.1 ஓவரில் 155 ரன்னுடன் 2வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அதனால்184 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை ஆஸ்திரேலியா அபாரமாக வென்றது. ஆஸி தரப்பில், கம்மின்ஸ், ஸ்காட் தலா 3, லயன் 2, ஸ்டார்க் ஒரு விக்கெட் எடுத்தனர். ஆட்ட நாயகனாக முதல் இன்னிங்சில் 49 ரன், 3 விக்கெட், 2வது இன்னிங்சில் 41 ரன், 3 விக்கெட் எடுத்த ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸி முன்னிலை பெற்றுள்ளது. 2 அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் ஜன. 3ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.

* டபிள்யுடிசி இறுதிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு வாய்ப்பு கம்மி
இந்தியாவுடனான 4வது டெஸ்டில் வென்ற ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான (டபிள்யுடிசி) இறுதிப் போட்டியில் தகுதி பெறும் வாய்ப்பு வலுப்பெற்றுள்ளது. வரும் 3ம் தேதி சிட்னியில் துவங்கும் 5வது டெஸ்டில் இந்தியா வென்றாலும், வரும் ஜனவரியில் துவங்கும் இலங்கை-ஆஸி இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கிடைக்கும் முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. டபிள்யுடிசி இறுதிப் போட்டிக்கு தென் ஆப்ரிக்கா ஏற்கனவே தகுதி பெற்று விட்டது. புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களுக்குள் வரும் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மோதும்.

டபிள்யுடிசி புள்ளிப் பட்டியல்
ரேங்க் அணி வெற்றி சதவீதம்
1 தென்
ஆப்ரிக்கா 66.67
2 ஆஸ்திரேலியா 61.46
3 இந்தியா 52.78

ஷேவாக்கை முந்திய ஜெய்ஸ்வால்
* ஆஸ்திரேலியாவுடனான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சிலும் சிறப்பாக ஆடிய இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 84 ரன் எடுத்து சர்ச்சைக்குரிய வகையில் அவுட்டானார்.
முதல் இன்னிங்சில் அவரது ஸ்கோர் 82. இதையடுத்து ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ரன் எடுத்த இந்தியர் பட்டியலில் வீரேந்தர் ஷேவாக்கை பின் தள்ளி 3ம் இடம் பிடித்துள்ளார்.
* நடப்பு 2024ல் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 1478 ரன்களுடன் ஜெய்ஸ்வால் 2ம் இடத்தை பிடித்துள்ளார். 15 போட்டிகள் ஆடியுள்ள அவர் 3 சதங்கள், 9 அரை சதங்கள் விளாசியுள்ளார். அவரது சராசரி, 54.74. இந்த பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட், 17 போட்டிகளில் 1556 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

பும்ரா கில்லி
* சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட 4 வீரர்களின் பெயர்களை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்தின் ஜோ ரூட், ஹாரி புரூக், இலங்கையின் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
* பும்ரா மெல்போர்னில் விளையாடிய பாக்சிங் டே டெஸ்ட்களில் 6 இன்னிங்ஸ்களில் இதுவரை 24 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இந்த ஆண்டு மட்டும் 13 டெஸ்ட்களில் ஆடியுள்ள அவர் 71 விக்கெட்களை அள்ளியுள்ளார்.

* ரோகித், கோஹ்லி… ரிடையர் ஆகிடுங்க! இணையத்தில் பொங்கிய ரசிகர்கள்
முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்ட மெல்போர்ன் நகரில் நடந்த பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் முதல் இன்னிங்சில் 3, 2வது இன்னிங்சில் 9 ரன் எடுத்தார். விராட் கோஹ்லி முதல் இன்னிங்சில் 36, 2வது இன்னிங்சில் 5 ரன் எடுத்து ரசிகர்களை நோகடித்தார்.
நட்சத்திர வீரர்களின் மோசமான ஆட்டத்தால் 4வது டெஸ்டில் இந்தியா படுதோல்வியை சந்தித்துள்ளது. இது, கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து இணையத்தில், சமூக வலைதளங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ரோகித், கோஹ்லிக்கு எதிராக ஆவேசமான கருத்துக்களை வெளிப்படுத்தினர். பெரும்பாலோர், ‘இருவரும் ரிடையர் ஆவது நல்ல’ என கருத்து தெரிவித்திருந்தனர். பல ரசிகர்கள், ‘ரோகித்தும், கோஹ்லியும் விளம்பரங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவதை விடுத்து, போட்டிகளில் சிறப்பாக ஆடுவதில் கவனம் செலுத்த வேண்டும்’என அறிவுரை கூறியிருந்தனர்.

* அவுட் ஆவதில் ரோகித் சாதனை
டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனிடம் விக்கெட்டை அதிகமுறை (6) பறிகொடுத்த கேப்டன் என்ற சாதனையை கேப்டன் ரோகித் சர்மா பெற்றுள்ளார். கேப்டன் விக்கெட்டை அதிக முறை (6) கைப்பற்றிய கேப்டன் என்ற பெருமை ஆஸி கேப்டன் பேட் கம்மின்சுக்கு கிடைத்துள்ளது.

The post த்ரில் போட்டியில் இந்தியா சொதப்பல்: பஞ்சர் ஆக்கிய பாக்சிங் டே டெஸ்ட்; ஆஸியிடம் மோசமான தோல்வி appeared first on Dinakaran.

Tags : India ,Boxing Day Test ,Aussie ,Melbourne ,Australia ,Gavaskar ,Boxing Day ,Dinakaran ,
× RELATED பாக்சிங் டே டெஸ்ட்; ஆஸ்திரேலிய...