×

பாலியல் உறவு என்ற வார்த்தை மட்டுமே துன்புறுத்தல் ஆகாது; போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் விடுதலை: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: பாலியல் உறவு என்ற வார்த்தை மட்டுமே பாலியல் துன்புறுத்தல் ஆகாது என்று கூறிய டெல்லி உயர் நீதிமன்றம், போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவரை விடுதலை செய்தது. தலைநகர் டெல்லியின் ஃபரிதாபாத் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது 14 வயது மகளை, கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடத்திச் சென்றதாக போலீசில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், அந்த நபரை தேடிப் பிடித்து போலீசார் கைது செய்தனர்.

அந்த நபரின் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் கடந்தாண்டு, பலாத்கார குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கின் வாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரதிபா சிங் மற்றும் நீதிபதி அமித் சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பில், ‘பாதிக்கப்பட்ட சிறுமி தானாக முன்வந்து குற்றம் சாட்டப்பட்டவருடன் சென்றுள்ளார். அப்போது ​பாலியல் பலாத்காரம் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. பாலியல் உறவு என்ற வார்த்தையை பயன்படுத்துவதால் மட்டுமே, அது பாலியல் துன்புறுத்தல் ஆகாது. இதனை விசாரணை நீதிமன்றம் எவ்வாறு முடிவு செய்ய முடியும் என்பது தெளிவாக தீர்ப்பில் குறிப்பிடவில்லை. ஒருவேளை பாலியல் துன்புறுத்தல், பாலியல் உறவில் இருந்திருந்தால், அதற்கான ஆதாரங்களை காட்டியிருக்க வேண்டும். வெறும் அச்சத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கக் முடியாது. பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்குக் குறைவானவர் என்ற காரணத்தால், அவருடன் பாலியல் உடலுறவு நடந்ததாக கூறமுடியாது.
அவ்வாறு ஒரு முடிவுக்கு வரவும் கூடாது.

பாதிக்கப்பட்டவர் அளித்த வாக்குமூலத்தில் பாலியல் உடல் உறவு என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். ஆனால் அதற்கான அர்த்தம் என்ன என்ற தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. போக்சோ சட்டப் பிரிவுகளின் குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த வாதங்களும் முழுமையாக இல்லை. குற்றம்சாட்டப்பட்டவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கான எந்த காரணத்தையும் வெளிப்படுத்தவோ ஆதரிக்கவோ இல்லை. எனவே விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. மேல்முறையீட்டாளரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது’ என்று கூறியுள்ளனர்.

The post பாலியல் உறவு என்ற வார்த்தை மட்டுமே துன்புறுத்தல் ஆகாது; போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் விடுதலை: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : POCSO ,Delhi High Court ,New Delhi ,Faridabad ,Delhi ,Dinakaran ,
× RELATED மகள் இருக்கும் இடம் தெரிந்தும்...