திருமயத்தில் வங்கி கட்டிடத்தில் இருந்து கரும்புகை கிளம்பியதால் பரபரப்பு: தீயணைப்பு போலீசார் விரைந்து சென்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு

திருமயம், டிச.30: திருமயத்தில் வங்கி செயல்பட்டு வந்த கட்டிடத்தில் யுபிஎஸ் கருவியில் கோளாறு காரணமாக கரும்புகை புகை கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கோட்டைத் தெரு பகுதியில் பிரபல பொதுத்துறை வங்கியான கனரா வங்கி கிளை ஒன்று இயங்கி வருகிறது. தரைத்தளம் மற்றும் மேல் தளத்துடன் இயங்கும் வங்கிக் கிளையில் தரைத்தளத்தில் வங்கியின் முக்கிய ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில் மேல் தளத்தில் வங்கிக்கு தேவையான மின்சாதனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளையில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு தொடங்கி பராமரித்து வருகின்றனர்.

இதனிடையே நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் வங்கியின் மேல் தளத்தில் உள்ள அறையில் இருந்து கருகிய நெடியுடன் புகை வெளிவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் வங்கி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல்அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வங்கி ஊழியர் திருமயம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் புகை வந்த அறைக்குச் சென்று பார்த்தபோது வங்கிக்கு மின் வினியோகம் கொடுக்கும் யூபிஎஸ் கருவி முற்றிலும் கருகி புகைந்து கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் வங்கியில் புகை உருவானது அறிந்த வாடிக்கையாளர்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் குவிந்ததால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post திருமயத்தில் வங்கி கட்டிடத்தில் இருந்து கரும்புகை கிளம்பியதால் பரபரப்பு: தீயணைப்பு போலீசார் விரைந்து சென்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: