கூடலூர் : கூடலூர் அருகே செம்பக்கொல்லி பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் மீண்டும் காட்டு யானை அட்டகாசம் செய்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
கூடலூரை அடுத்த தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட செம்பக்கொல்லி பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒற்றை காட்டு யானை புகுந்தது. அப்பகுதியில் சுமேஷ் என்பவரது வீட்டை உடைத்து சேதப்படுத்தியது.
அப்போது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சுமேஷ் மற்றும் குடும்பத்தினர், குழந்தைகள், யானை வீட்டை உடைப்பது அறிந்து பின்புற வழியாக வெளியேறி தப்பியுள்ளனர். கடந்த 2 தினங்களுக்கு முன் இதே பகுதியில் வசிக்கும் வாசு என்பவரது வீட்டையும் காட்டு யானை உடைத்து சேதப்படுத்தியது. தொடர்ச்சியாக, இரவு நேரங்களில் இப்பகுதிக்கு வரும் ஒற்றை யானை இப்போது தற்காலிக வீடுகளை உடைக்க துவங்கியுள்ளதால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து பழங்குடியின மக்கள் கூறுகையில், ‘‘செம்பக்கொல்லி பகுதியில் அரசு வீடு கட்டி வழங்குவதற்காக ஏற்கனவே குடியிருந்த வீடுகள் இடிக்கப்பட்டு புதிதாக வீடு கட்டும் பணிகளும் தரைத்தளத்துடன் வருடக்கணக்கில் பாதியில் நிற்கின்றது.
இதனால் இங்கு தற்காலிக குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றோம். இந்நிலையில் அருகிலுள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து அகழிகளை சேதப்படுத்தி உள்ளே புகுந்து விடும் காட்டு யானை ஒன்று இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்த துவங்கி உள்ளது.
இதனால் எங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. எங்களுக்கான புதிய குடியிருப்புகளை விரைவாக கட்டி முடிக்கவும், அருகிலுள்ள முதுமலை வன எல்லைகளில் அகழியை சீரமைத்து வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post செம்பக்கொல்லி பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் மீண்டும் ஒற்றை யானை அட்டகாசம் appeared first on Dinakaran.