*மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம்
கேடிசி நகர் : நெல்லை மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த கிராமச் சாலைகளை சீரமைக்க தமிழக அரசு ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நேற்று நடந்த மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் அதன் தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமையில் நேற்று காலை நடந்தது. நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு மாவட்ட பஞ். துணைத்தலைவர் செல்வலட்சுமி அமிதாப் முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள் அருண் தவசு, சாலமன் டேவிட், கனகராஜ், மகேஷ், ஜான்ஸ் ரூபா, லிங்கசாந்தி, கிருஷ்ணவேணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கவுன்சிலர் கனகராஜ் பேசுகையில், சட்டமாமேதை அம்பேத்கர் குறித்து மக்களவையில் அவதூறாகப் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து பேசிய மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை பட்டியலிட்டனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெகதீஷ் பேசுகையில் ‘‘வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 9ம்தேதி மாவட்ட ஊராட்சியின் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
இதில் மாவட்ட ஊராட்சி பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.
கூட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம சாலைகள் அனைத்தும், மிகுந்த சேதமடைந்துள்ளது. இதனால் போக்குவரத்துக்கு பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதுதொடர்பாக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே இதில் சிறப்பு கவனம் செலுத்தி முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.150 கோடி நிதி ஒதுக்க தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சுகாதார பணிகளுக்காக ரூ.1 கோடி செலவில் 40 பேட்டரி வாகனங்கள் வாங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post நெல்லை மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த கிராமச் சாலைகளை சீரமைக்க ரூ.150 கோடி ஒதுக்க வேண்டும் appeared first on Dinakaran.