ரூ.64.44 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 400 வகுப்பறைக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.99.68 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 400 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் 64 கோடியே 44 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 400 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் 6 மாவட்டங்களில் 35 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், என மொத்தம் 99 கோடியே 68 இலட்சம் ரூபாய் செலவிலான கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 8 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 95 வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் வழங்குதல், சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்தி, உட்கட்டமைப்புகளான பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஊரகச் சந்தைகள், உணவு கிடங்குகள் போன்றவற்றை ஏற்படுத்தி, புதிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அதனை திறம்பட செயல்படுத்தி, தமிழ்நாடு அரசு நாட்டிலேயே முன்னோடியாக விளங்கி வருகிறது.

புதிதாகக் கட்டப்பட்டுள்ள 400 வகுப்பறைக் கட்டடங்களை திறந்து வைத்தல்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் (CFSIDS-I) கீழ், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 171 பள்ளிகளில் 56.11 கோடி ரூபாய் செலவில் 350 புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகள்;
அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த தூய்மைக்கு புத்துயிர் அளித்தல் (RBIOCGS) திட்டத்தின் கீழ், தருமபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 24 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 8.33 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 50 புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகள்; என மொத்தம் 21 மாவட்டங்களிலுள்ள 195 பள்ளிகளில் 64.44 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 400 வகுப்பறைக் கட்டடங்களை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

புதிதாகக் கட்டப்பட்டுள்ள 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தல்

ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு விண்ணப்பிக்க வருகை தரும் பொதுமக்களின் வசதிக்காகவும், ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் நல்ல காற்றோட்டமான அலுவலக சூழலில் பணியாற்ற ஏதுவாகவும், பழைய பழுதடைந்த கட்டடங்களுக்குப் பதிலாக புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்டும் திட்டம் 2008-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையிலான அரசால் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, தற்போது வரை 314 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, அதில் 274 கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
­
அதன் தொடர்ச்சியாக, ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டக்கூறு நிதியின் மூலம் கோயம்புத்தூர் மாவட்டம் – மதுக்கரை, புதுக்கோட்டை மாவட்டம் – திருமயம், விருதுநகர் மாவட்டம் – இராஜபாளையம், இராணிப்பேட்டை மாவட்டம் – திமிரி, தென்காசி மாவட்டம் – குருவிகுளம், திருவாரூர் மாவட்டம் – கோட்டூர், நீடாமங்கலம், திருவாரூர் மற்றும் முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் 35 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 95 வாகனங்களை வழங்குதல்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2024-25 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கள அலுவலர்கள், துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் பணிகளின் தரத்தை கண்காணிக்கவும் உரிய காலத்தில் முடித்திடுவதை உறுதி செய்யவும், கள ஆய்வு மேற்கொள்ளவும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, செயற்பொறியாளர்கள், உதவி இயக்குநர்கள், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 8 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 95 வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சேவையினை முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இவ்வரசு பொறுப்பேற்றத்திலிருந்து இதுநாள் வரை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக மொத்தம் 92 கோடியே 26 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 820 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர் விருது பெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர். இந்திய அளவில் 2024-ஆம் ஆண்டு உட்கட்டமைப்புகளில் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக கோயம்புத்தூர் மாவட்டம், எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம், கீரநத்தம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசுக்கான விருதும், மகளிருடன் நல்லிணக்கம் கொண்ட ஊராட்சியாக தென்காசி மாவட்டம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம், வரகனூர் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு மூன்றாம் பரிசுக்கான விருதும் இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் புதுதில்லியில் 11.12.2024 அன்று வழங்கப்பட்டது.

இவ்விருதுகளை பெற்ற கீரநத்தம் ஊராட்சிமன்ற தலைவர் ரா.பழனிசாமி மற்றும் வரகனூர் ஊராட்சிமன்ற தலைவர் ம.சுப்புலட்சுமி ஆகியோர் முதலமைச்சர் அவர்களை இன்றையதினம் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பா.பொன்னையா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ரூ.64.44 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 400 வகுப்பறைக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: