×

இசை முரசு நாகூர் ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா: முதல்வரை நேரில் சந்தித்து அவரது குடும்பத்தினர் நன்றி

சென்னை: இசை முரசு நாகூர் ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா என்று பெயர் சூட்டியதற்கு முதல்வரை சந்தித்து அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். நாகூர் ஹனிபா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் இஸ்மாயில் முகமது ஹனிபா , 1925-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் நாள் இராமநாதபுரம் மாவட்டம், வெளிப்பட்டினத்தில் திரு. முகமது இஸ்மாயில் திருமதி மரியம் பீவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். இவரது தந்தை முகமது இஸ்மாயில் அவர்கள் நாகூரை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் முகமது ஹனிபா அவர்கள் நாகூர் E.M. ஹனிபா என்று அழைக்கப்பட்டார்.

இயற்கையிலேயே இசை ஞானம் கொண்டிருந்த நாகூர் ஹனிபா தனது 15 வது வயதிலிருந்தே திருமண நிகழ்வுகளில் இசைக் கச்சேரிகள் நடத்தத் தொடங்கினார். தனது தனித்துவமான குரல் வளத்தாலும், பாடல் திறத்தாலும் உலகெங்கிலும் அவருக்கு இலட்சக்கணக்கான ரசிகர்கள் உருவாகினர். நாகூர் ஹனிபா நூற்றுக்கணக்கான இஸ்லாமியப் பாடல்களையும், இயக்கப் பாடல்கள் மற்றும் இதர பாடல்களையும் பாடி பெரும் புகழ்பெற்றவர்.

1953-ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞரின் திரைக்கதையில் வெளியான ‘நாம்’ படத்தில் நாட்டுக்கூத்துப் பாணியில் இயற்றப்பட்ட பலர் சேர்ந்து பாடிய ஒரு பாடலில் நாகூர் ஹனிபா அவர்களும் இணைந்து பாடினார். இதுவே அவரது முதலாவது திரையுலகப் பாடலாகும். இதை தொடர்ந்து பல படங்களில் பாடல்களை பாடியுள்ளார். ‘இறைவனிடம் கையேந்துங்கள்’! ‘எல்லோரும் கொண்டாடுவோம்’, ‘நட்ட நடு கடல் மீது’, ‘உன் மதமா என் மதமா’, ‘அழைக்கின்றார் அண்ணா’, ‘ஒடி வருகிறான் உதயச்சூரியன்’ போன்ற பாடல்கள் மிகப் பிரபலமானவை ஆகும்.

கலைஞர் , நாகூர் ஹனிபாவை குறிப்பிட்டு சொல்லும் போது, “ஹனி” என்றால் தேன், “பா” என்றால் பாட்டு, ஹனிபா-வின் பாட்டு தேனாக இனிக்கிறது என்றும், எனவே அவருக்கு ஹனிபா என்று பெயர் வைத்தவர்களை பாராட்ட வேண்டும்” என்று புகழ்ந்து பேசியுள்ளார். நாகூர் ஹனிபாவின் இசைப் பங்களிப்பைப் பாராட்டி தமிழறிஞர் சண்முக தேசிகர் “இசை முரசு” என்ற பட்டத்தை வழங்கினார். நாகூர் ஹனிபா Golden Voice from India என்று சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் Straits Times பத்திரிகையால் பாராட்டப் பெற்றவர்.

சுயமரியாதை இயக்கத் தொண்டராய், இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரராய் தம் அரசியல் வாழ்வைத் தொடங்கிய நாகூர் ஹனிபா , நீதிக்கட்சி, திராவிட இயக்கங்களின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர். பட்டுக்கோட்டை அழகிரி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், கண்ணியத்தலைவர் காயிதே மில்லத் ஆகியோரது அன்பையும் பெற்றவர். ஹனிபா என்ற அரபிச் சொல்லுக்கு நேர்மையானவர் என்று பொருள். பெயருக்கு ஏற்ப நேர்மையின் இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் நாகூர் ஹனிபா. ஆடம்பரம் விரும்பாமல் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்.

“இசை முரசு” நாகூர் ஹனிபா தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றியவர். கம்பீரமான குரல் வளத்தால் அனைவரையும் கவர்ந்து புகழ்பெற்ற நாகூர் ஹனிபா நிறைவான வாழ்க்கை வாழ்ந்து 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் நாள் மறைந்தார்.தமிழ் இசைக்கும். திரை இசைக்கும் சுமார் 75 ஆண்டுகள் தொண்டாற்றிய நாகூர் E.M. ஹனிபா அவர்களின் பங்களிப்பை போற்றி பெருமை சேர்க்கும் வகையில், நாகப்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நாகூர் தைக்கால் தெருவிற்கு “இசை முரசு நாகூர் E.M. ஹனிபா தெரு” என்றும்,

சில்லடி கடற்கரைக்குச் செல்லும் சாலையில் புதுப்பிக்கப்படும் சிறுவர் விளையாட்டுப் பூங்காவிற்கு “இசை முரசு நாகூர் E.M. ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா” என்றும் பெயரிட்டு அழைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். நாகப்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நாகூர் தைக்கால் தெருவிற்கு “இசை முரசு நாகூர் E.M. ஹனிபா தெரு” என்றும், சில்லடி கடற்கரைக்குச் செல்லும் சாலையில் புதுப்பிக்கப்படும் சிறுவர் விளையாட்டுப் பூங்காவிற்கு “இசை முரசு நாகூர் E.M. ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா” என்றும் பெயர் சூட்டி சிறப்பு செய்ததற்காக,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (21.12.2024) தலைமைச் செயலகத்தில், நாகூர் ஹனிபாவின் மகன்கள். நாசர் மற்றும் நவ்சாத், மகள் ஜரினா பேகம், மருமகன் சாகுல் அமீது மற்றும் அவர்களது குடும்பத்தினர் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வின்போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகம்மது ஷா நவாஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் .ந.கௌதமன், நாகப்பட்டினம் நகரமன்றத் தலைவர் இரா.மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

 

The post இசை முரசு நாகூர் ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா: முதல்வரை நேரில் சந்தித்து அவரது குடும்பத்தினர் நன்றி appeared first on Dinakaran.

Tags : Musician Nagore Hanifa Centenary Memorial Park ,Chief Minister ,Chennai ,Ismail Mohammed Hanifa ,Nagore Hanifa ,
× RELATED தூத்துக்குடியில் முத்திரைத்...