இதனால் யானை கோபமாக உள்ளதோ? இனி வரும் காலங்களில் அதன் அருகில் பழைய மாதிரி செல்வதற்கு பக்தர்கள் தயங்குவார்கள். யானையை கட்டாயம் வெளியே முகாமுக்கு அனுப்பிடுவார்கள் என பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர். ஆனால் சம்பவம் நடந்த நேரம் முதல் தற்போது வரையிலும் வனத்துறை, கால்நடைத்துறையின் தீவிர கண்காணிப்பிலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறையின் பாதுகாப்பிலும், பாகன்களின் அரவணைப்பிலும் யானை தொடர்ந்து இருந்து வருகிறது. மருத்துவர்களின் ஆலோசனையின்படி பாகன்கள் யானையை கண்காணித்தும், உணவளித்தும் வருகின்றனர். பாகன்களின் கட்டளைக்கு வழக்கம் போல செவி சாய்க்கும் யானை தற்போது உற்சாகமாக காணப்படுகிறது. அதனை வழக்கம் போல குடிலிலேயே வைத்து குளிப்பாட்டி, நவதானிய உணவுகள் மற்றும் பச்சை நாற்றுகளை பாகன்கள் செந்தில்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கி வருகின்றனர்.
இதே போல கடந்த டிச. 6ம்தேதி யானையை மருத்துவ பரிசோதனை செய்த மாவட்ட வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன் யானை இயல்பு நிலைக்கு முழுவதும் திரும்பிவிட்டதால் பகல் நேரங்களில் ஆள்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நடைபயிற்சி செய்வதற்கு அறிவுறுத்தினார். இதற்கான அடுத்த பணிகளை பாகன்கள் தொடங்கியிருந்தனர். இந்நிலையில் இன்று காலை யானை தங்கும் குடிலில் வைத்து திருக்கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் கஜபூஜை நடைபெற்றது. தொடர்ந்து பாகன்கள் யானையை குடிலை விட்டு வெளியே அழைத்து வந்தனர். அதன்பின்னர் யானை திருக்கோயில் பழைய கலையரங்கம் பின்புறம் உள்ள யாத்ரி நிவாஸ் விடுதி வளாகத்தில் நடைப்பயிற்சியாக சுற்றி வந்து மீண்டும் குடில் சேர்ந்தது. அப்போது மாவட்ட வனத்துறை கால்நடை மருத்துவ அலுவலர் மனோகரன், உதவி மருத்துவர் அருண், ஆய்வாளர் அர்னால்டு, பணியாளர்கள் கந்தசாமி, ஜிந்தா ஆகியோர் பாதுகாப்புக்காக உடன் சென்றனர்.
பாகனை தாக்கிய சம்பவம் நடந்து சரியாக ஒரு மாத காலத்திற்குப்பிறகு திருச்செந்தூர் கோயில் தெய்வானை முதன்முறையாக இன்று தான் நடைப்பயிற்சி சென்றதை தூரத்தில் இருந்து பக்தர்கள் பார்த்து ரசித்தனர்.
The post ஒரு மாதத்திற்கு பிறகு திருச்செந்தூர் கோயில் தெய்வானை யானைக்கு நடைப்பயிற்சி appeared first on Dinakaran.