தளபதி இகோர் கிரிலோவ் படுகொலைக்கு பொறுப்பேற்றது உக்ரைன்: விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த குண்டு வெடிப்பில் ரஷ்ய அணுசக்தி படைகளின் தலைவர் ஜெனரல் இகோர் கொல்லப்பட்டார். ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய நிலையில் மூன்றாண்டுகளை கடந்தும் முடிவுறாமல் நீடிக்கிறது. இந்நிலையில் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் ரஷ்ய அணுசக்தி படைகளின் தலைவர் பலியானார்.

ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகைக்கு அருகேவுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த மின்சார இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ரஷ்யாவின் அணு, உயிரியல் மற்றும் ரசாயன பாதுகாப்பு படைகளின் தலைவர்களில் ஒருவரான லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரிலோவ் கொல்லப்பட்டார். மேலும் அவரது உதவியாளரும் உயிரிழந்தார். இந்த குண்டு வெடிப்பு குறித்து ரஷ்ய அரசு தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், கிரில்லோவ் படுகொலைக்கு உக்ரைன் பொறுப்பேற்பதாக அறிவித்து இருப்பதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

தங்களது படை வீரருக்கு எதிரான ரசாயன குண்டு தாக்குதல்களின் பின்னணியில் இகோர் கிரிலோவ் இருப்பதாக உக்ரைன் தொடர்ந்து குற்றச்சாட்டி வந்த நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டது ரஷ்யாவை ஆத்திரமடைய செய்துள்ளது. இகோர் படுகொலை தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கும் ரஷ்ய பாதுகாப்புப் படை இதற்கான பின்விளைவுகளை உக்ரைன் விரைவில் சந்திக்கும் என கூறியுள்ளது. இகோர் கிரிலோவின் படுகொலையால் ரஷ்யா – உக்ரைன் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை முயற்சி பெரும் பின்னடைவை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post தளபதி இகோர் கிரிலோவ் படுகொலைக்கு பொறுப்பேற்றது உக்ரைன்: விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: