நன்றி குங்குமம் தோழி
‘‘ஆயுர்வேதம்… ஆரோக்கிய வாழ்க்கைக்கான முறை. இதைத்தான் நம் முன்னோர்கள் காலம் காலமாக பின்பற்றி வந்தார்கள். எப்போது நாம் மேற்கத்திய முறையினை பின்பற்ற துவங்கினோமோ அன்று முதல் நம்முடைய உடலில் பல உபாதைகளை சந்திக்க ஆரம்பித்தோம், சீரான உடல், ஆரோக்கியத்தின் அழகு’’ என்கிறார் சஞ்சீவனம் ஆயுர்வேதா சிகிச்சை மையத்தின் வெல்நெஸ் நிபுணரான ராகுல்.
‘‘ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அவரின் வாழ்க்கை முறையும் ஆரோக்கியமாக அமைத்திருக்க வேண்டும். காரணம், இன்றைய சூழலில் ஆண்-பெண் இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். குறிப்பாக பெண்கள் வீடு மட்டுமில்லாமல் அலுவலக வேலையும் பார்க்கிறார்கள். ஆண்கள் தங்களின் வேலையினை தக்க வைத்துக் கொள்வது மட்டுமில்லாமல் அடுத்த நிலைக்கு தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற நிலை.
இதனால் ஸ்ட்ரெஸ் என்னும் அரக்கனால் இருவருமே பாதிக்கப்படுகிறார்கள். ஒரு பக்கம் மனம் சார்ந்த பாதிப்பு ஏற்படுகிறது என்றாலும், மறுபக்கம் நம் சுற்றுச்சூழலால் ஏற்படும் மாசும் நம்முடைய உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. விளைவு பெயர் தெரியாத புது நோய்கள். நம் வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ் என்பது ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. ஆனால் அதனை நல்ல முறையில் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். அந்த முறையினைதான் நாங்க எங்க மருத்துவமனையில் வழங்கி வருகிறோம்’’ என்றவர், ஆரோக்கிய வாழ்க்கைக்கான திறவுகோல் குறித்து விவரித்தார்.
‘‘பொதுவாக 25 முதல் 40 வயது வரை வாழ்க்கையின் பல கட்டங்களை சந்திக்கிறார்கள். படிப்பு முடித்து வேலை, கல்யாணம், குழந்தைகள், குடும்பம், குழந்தைகளின் படிப்பு, பெற்றோர்களின் கவனிப்பு என அனைத்தும் அவர்களை சூழும் போது ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவிதமான மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இது நாளடைவில் அவர்களின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும். 25 வயதில் நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளும் எளிதாக ஜீரணமாகி, உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உறிஞ்சப்படும். ஆனால் அதுவே 40 வயதில் ஓட்டல் உணவினை சாப்பிட்டு, முறையற்ற உடற்பயிற்சியுடன் மன உளைச்சலும் சேரும் போது உங்களின் உடலில் பலவித பாதிப்பினை சந்திக்கிறது. இது தான் ஒருவரின் உடலில் ஏற்படக்கூடிய ஆரம்பநிலை கோளாறு என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதனை சீர் செய்யாவிட்டால் நீரிழிவு, உடல் பருமன், சிறுநீரகக் கல், கல்லீரலில் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்ற பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வினை ஆயுர்வேதத்தில் வெல்நெஸ் மூலம் வழங்குகிறோம். உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, முறையான உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கத்தில் மாற்றம் என அனைத்து குறித்தும் எங்களின் வெல்நெஸ் சிகிச்சைகள் மூலம் ஆலோசனை வழங்கி வருகிறோம்.
இங்கு தங்கி அதற்கான சிகிச்சையினை பெறுபவர்கள், சிகிச்சை காலம் முடிந்த பிறகும் அதனை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று அறிவுரையும் கொடுக்கிறோம். சிகிச்சையின் காலத்தில் அவர்களின் பிரச்னைக்கு ஏற்ற மசாஜ், டீடாக்ஸ், உணவு முறை, உடற்பயிற்சி, யோகாசனம், தியானம் அனைத்தும் அடங்கும். உடற்பயிற்சி, யோகாசனம் உடல் நலனைக் காக்கும். அதே போல் தியானம் மனதினை அமைதியாக்கி மன உளைச்சலை நீக்கும். பண்டையக் காலத்தில் வாகன வசதி இல்லாததால், அனைவரும் நடப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். வாகனங்கள் வந்த பிறகு அனைவரும் நடக்க வேண்டும் என்பதையே மறந்துவிட்டோம்.
வீட்டிலிருந்து வெளியே செல்ல வாகனங்கள் இருப்பதால், உடலுக்கு தேவையான உடற்பயிற்சியினை நாம் அளிப்பதில்லை. விளைவு கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமன், நீரிழிவு பிரச்னைகள். இந்தப் பிரச்னையில் இருந்து மீள சின்னச் சின்ன உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். எண்ணெயில் பொரித்த உணவினை தவிர்த்து, அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள டாக்சின்களை நீக்க உதவும்.
மேலும் சிலர் மன உளைச்சலில் இருக்கும் போது அதிக அளவு உணவினை உட்கொள்வார்கள் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம் மனம் அமைதியாக இருக்கும் போது, தேவையற்ற உணவினை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது. வாழ்நாள் முழுக்க மருந்துகளுடன் வாழ்க்கை வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு நம் கையில்தான் உள்ளது. இதை புரிந்து கொண்டாலே அனைவருக்கும் ஆரோக்கிய வாழ்க்கை முறை கியாரன்டி.
நம் ஒருவருக்குள் ஒரு மருத்துவர் மறைந்துள்ளார். நம் உடலின் நிலை என்ன? அதை எவ்வாறு கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். உடல் கொடுக்கும் சிக்னலை தவிர்க்காமல், கவனமாக பார்த்தால் அதற்கான பலனை உணர முடியும். மேலும் இது நம்மை மட்டுமில்லாமல் நம்மை சார்ந்தவர்களிடமும் மாற்றத்தினை ஏற்படுத்தும். காரணம், யோகாசனம் வீட்டில் செய்யும் போது, அதைப் பார்த்து நம் குழந்தைகளும் செய்ய துவங்குவார்கள். இங்கு வரும் அனைவருக்கும் அவர்களின் உடல் நிலை பொருத்து தனிப்பட்ட
சிகிச்சைகள் அளிப்பதுதான் சஞ்சீவனத்தின் சிறப்பம்சம்’’ என்றவர், சிகிச்சைக்கான படிநிலைகளை விவரித்தார்.
‘‘ஆயுர்வேத சிகிச்சை என்பது அனைவருக்கும் ஒன்று போல் இருக்காது. அவரவரின் உடல் நிலைக்கு ஏற்ப மாறுபடும். முதலில் உடலினை டீடாக்ஸ் செய்வோம். அதன் பிறகு முட்டி வலி, வீக்கம் இருந்தால் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்படும். பிறகு பிரச்னைக்கு ஏற்ப மருந்துகள், சூரணம், லேகியம், கஷாயம் மற்றும் மாத்திரை வடிவில் நாங்களே இங்கு தயாரிக்கிறோம்.
அதனை அவர்கள் உட்கொள்ளும் போது, உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர்வார்கள். உதாரணத்திற்கு டீடாக்ஸ் செய்யும் போது சிலருக்கு உடலில் உள்ள நச்சு, மலம் அல்லது சிறுநீர் மூலமாக வெளியேறும். இது அவர்களின் உடலை லேசாக்கும். உடல் எடையும் குறையும். மேலும் இங்கு ஒவ்வொரு பிரச்னைக்கு ஏற்ப தனிப்பட்ட சிகிச்சை மசாஜும் உள்ளது. இவையும் தனிப்பட்ட நபரின் தேவைக்கு ஏற்ப மாறுபடும். ஒரு வாரம் தங்கியிருந்து சிகிச்சை பெற்று செல்பவர்கள் பலர். அதன் பலனை கண்கூடாக உணர முடியும். சிகிச்சை பெற்ற பிறகும் இந்தப் பழக்கத்தினை தொடர வேண்டும். அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கான அறிவுரையும் நாங்க கொடுப்பதால், எதிர்காலம் அவர்களுக்கு
ஆரோக்கியமாக அமையும்’’ என்றார் வெல்நெஸ் நிபுணரான ராகுல்.
தொகுப்பு: நிஷா
The post உடல்… மனம்… டீடாக்ஸ் செய்யும் ஆயுர்வேதம்! appeared first on Dinakaran.