×

இளம் வயதில் வரலாற்று சாதனை செய்த உலக செஸ் சாம்பியன் தமிழக வீரர் குகேஷ்: பிரதமர், முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்து

சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த தமிழக வீரர் குகேசுஷுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டி சிங்கப்பூரில் நடந்து வந்தது. இந்த போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில் தமிழக வீரர் டி குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னுடன் மோதினார். இறுதியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.

இதன் மூலம் இளம் வயதில் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார். அதாவது 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். தமிழக வீரர் ஒருவர் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றதற்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி

உலக செஸ் சாம்பியின்ஷி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் குகேஷுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- குகேஷ் வெற்றி வரலாற்றுக்கு முன் மாதிரியான வெற்றியாகும். அவருக்கு என்னுடயை வாழ்த்துக்கள். இந்த வெற்றி குகேஷின் திறமை, கடின உழைப்பு, அயராத ஆற்றலுக்கு கிடைத்த வெற்றியாகும். குகேஷின் எதிர்கால முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இவரது வெற்றியானது மில்லியன் கணக்கான இளம் மனங்களை பெரிய கனவு காண தூண்டியிருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலினும் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ள குகேஷுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உன் திறமையால் தமிழகம் பெருமை கொள்கிறது. இந்த சாதனை நாட்டின் செஸ் பாரம்பரியத்தை தொடர்வதோடு, மேலும் பல உலகத்தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்குவதனால் உலக செஸ் தலைநகராக அதன் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்த உதவுகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

இதேபோல் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் குகேஷுக்கு வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “குகேஷ் வெற்றி தமிழகத்தை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. இளம் வயதில் குகேஷின் அசாத்திய திறமை உத்வேகம் அளிக்கிறது. குகேஷுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்: உலக சதுரங்க வாகையர் பட்டத்தை மிகவும் இளம் வயதில் வென்ற தமிழர் குகேஷுக்கு பாராட்டுகள் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சிங்கப்பூரில் நடைபெற்று வந்த FIDE உலக சதுரங்க வாகையர் பட்டப் போட்டிகளின் 14-ஆம் ஆட்டத்தில், சீனத்தைச் சேர்ந்த தற்போதைய வாகையர் டிங் லிரெனை வீழ்த்தி வாகையர் பட்டத்தை வென்றிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

18 வயதில் இந்த பட்டத்தை வென்றதன் மூலம், கேரி காஸ்பரோவின் சாதனையை முறியடித்து உலகின் இளம் வயதில் உலக சதுரங்க வாகையர் பட்டத்தை வென்றவர் என்ற புதிய சாதனையை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு தான் சதுரங்க வாகையர்களின் விளைநிலம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறார். சதுரங்க உலகில் ஏற்கனவே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் வென்றுள்ள குகேஷ் மேலும் பல பட்டங்களை வெல்லவும், சாதனைகளைப் படைக்கவும் எனது வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

The post இளம் வயதில் வரலாற்று சாதனை செய்த உலக செஸ் சாம்பியன் தமிழக வீரர் குகேஷ்: பிரதமர், முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : KUKESH ,PM ,K. Stalin ,Vice Principal ,Chennai ,Modi ,Premier ,Stalin ,Deputy Principal ,Udayaniti Stalin ,Kukesush ,World Chess Championship ,World Chess Championship 2024 Tournament ,Singapore ,World Chess ,Chief Minister ,Vice President ,Dinakaran ,
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின்...