மூளையின் முடிச்சுகள்

நன்றி குங்குமம் தோழி

பேசுவது ஒரு கலையா..?

பேசித் தீர்க்காத பிரச்னை இந்த உலகில் உண்டா? அதனால்தான் மனம் விட்டு பேசுங்கள் என்று பலரும் கூறுகிறோம். உண்மையில், இங்கு அனைவரிடமும் மனம் விட்டு பேச முடிகிறதா, பேசினால் பிரச்னை தீர்ந்து விடுகிறதா? இல்லை பேசாமல் ஒதுங்கினால், நிம்மதியாக இருக்க முடிகிறதா என்றால், இரண்டுமே பெரிய சவாலாக இன்றைக்கு இருக்கிறது. அதனால்தான் என்னவோ, இந்த சவாலை ஒவ்வொரு நிறுவனமும் ஊழியர்களுக்கு கம்யூனிகேஷன் டிரைனிங் என்று சொல்லிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். மனிதர்களுக்கு அந்தளவிற்கா பேசுவது பற்றித் தெரியாமல் போய்விட்டது என்கிற கேள்வியும் நம் முன் நிற்கிறது.

இன்றைய காலக்கட்டத்தில் மனம் விட்டு உரையாடலாம் என்றால், ஒரு தனி நபருக்கு எதிராக எதிர் கருத்து சொன்னாலும் அல்லது அவர்களுக்கு ஒவ்வாத புது ஆலோசனைகள் சொன்னாலும் ஏதோ ஒரு விதத்தில் தள்ளி வைத்து விடுகிறார்கள். அதற்காக கூறும் விஷயங்களாக இருப்பது என்னவென்றால், மூட் அப்செட், மூட் ஸ்விங், ஒர்க் ப்ரெஷர், டைம் இல்லை, தூக்கம் சரியில்லை, ப்ரீமெனோபாஸ் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்.

உண்மையில், நம் வீட்டில் இருப்பவர்களுடன் அல்லது நாம் பழகும் மனிதர்களுடன், நம்மோடு உடன் இருக்கும் நபர்களுடன் பேசுவதற்கு என்னதான் பிரச்னை என்றால்? யாரும் இங்கே தன்னை குறை கூறி விடக்கூடாது என்றும், தன்னை யாரும் எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது என்பதும் நம் முன் வைக்கப்படும் கோரிக்கையாக இருக்கிறது. இதுவும் கூட எழுதப்படாத சட்டமாக முன் வைக்கிறார்கள்.

ஏனென்றால், நன்றாக படிக்கும் ஒருவரோ அல்லது நல்ல பதவியில் இருக்கும் ஒருவரோ அல்லது அனைத்தையும் பேசக்கூடிய ஒருவரோ பேசும்போது, நாம் வேறு கருத்து கூறினால், அவர்களின் சிந்திக்கும் திறனை நாம் சந்தேகப்படுகிறோம் அல்லது அவர்களின் அறிவை நாம் எதிர்க்கக் கூடாது என்ற மனோபாவம்தான் பேசுவதில் உள்ள சிக்கலாக மாறி இருக்கிறது.

ஏன் இப்படி மாறியது என்றால், எப்பொழுது தனிமனித சுதந்திரம், தனிமனித பேச்சுரிமை என்று வர ஆரம்பித்ததோ அப்போதிலிருந்து பேசுவது என்பது அல்லது பேசாமல் போவது என்பது ஒரு தனிப்பட்ட நபரின் விருப்பமாக உருவெடுத்தது. அதனால் தன்னைத் தவிர வேறு யார் பேசினாலும், அதை தடுத்து நிறுத்துவதற்கு புறக்கணிப்பது, அமைதியாக இருப்பது அல்லது தன் கருத்து மட்டுமே சரியானது என்று வாதிடுவது என்று தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

இவை எல்லாம் நம் மனம் ஏற்றுக் கொள்ளுமா அல்லது மூளை இதை முறையாக சிந்திக்குமா என்றால் சத்தியமாக இல்லை என்றே கூறலாம். காலம் காலமாக இங்கே மக்கள் உரையாடல் வழியாக, வாக்குவாதத்தின் மூலமாக, கோபப்பட்டு கத்துவதன் மூலமாக, அழுது தன்னுடைய நியாயத்தை எடுத்துக் கூறுவதின் வழியாக இப்படி பல உணர்வுகளின் கலவையாக பேசி தீர்த்து, கொட்டி தீர்த்துதான் உறவுகளை தக்கவைத்து இருக்கிறார்கள்.

ஆனால், இன்றைக்கு ஒரு சொல் மாறி வந்தாலும், ஒரு மனிதனின் உறவையே தள்ளி வைக்குமளவிற்கு தலைகீழாக நிலைமை மாறியுள்ளது. இது ஒரு வகையான புதுவிதமாக நம் மூளையை பழக்கப்படுத்து வதாகும். அந்தப் பழக்கத்துக்கு உடனே எல்லாம் மூளை மாறிவிடாது. மனிதர்களுக்கு மனிதர்கள் என்றுமே தேவைப்படுகிறார்கள். என்னதான் டிஜிட்டல் உலகம் என்று சொன்னாலும், ஒரு கட்டத்திற்கு மேல் நம்மால் டிஜிட்டலோடு இயங்க முடியாது.

இங்கு நாம் சாப்பிட, காதலிக்க, உறவு கொள்ள, கற்றுக் கொள்ள, தோல்வியில் இருந்து மீண்டு வர, வெற்றியைக் கொண்டாட, நோயிலிருந்து தங்களை மீட்டெடுக்க, பொருளாதாரப் பிரச்னை
களில் இருந்து மீண்டு வருவதற்கு என்று அனைத்திற்கும் மனிதனோடு மனிதன் மட்டுமே துணையாக நிற்க முடியும் என்று கூறுவோம். இவற்றிற்கு எல்லாம் இன்றைய பதில், புதுப்புது மனிதர்கள் உடனுக்குடன் கிடைத்து விடுகிறார்கள்.

அதனால் பிடித்த நெருங்கிய உறவுடன் மனக்கசப்பு ஏற்படுகிறது என்றால், அதிலிருந்து வெளிவருவதற்குப் புது மனிதர்களை இணைத்து விடுகிறார்கள். இது என்ன மாதிரியான மாற்றம் என்றால், இன்றைக்கு குழுவாக இணைந்து பல்வேறு அமைப்புகளாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு நாம் எப்பொழுது வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம், எப்பொழுது வேண்டுமானாலும் விலகிக் கொள்ளலாம். அதனால் உறவுகளிலும் சிக்கல் ஏற்படும் போது, இணைவதும், விலகுவதும் இயல்பாக மாற்றிக் கொண்டிருக்கும் சமூகமாக இருக்கிறது.

இதனால், மனம் விட்டுப் பேசுவது என்பது பலருக்கும் பெரிய பிரச்னையாக இருக்கிறது. பேசினால் சண்டை வந்து விடுமோ அல்லது பேசினால் பிரச்னையாகி விடுமோ என்ற பயமும், பதற்றமும் அமைதியாக்கி விடுகிறது. உண்மையில், பல வருடமாக பழகிய உறவுகள் கூடவே பேசுவதற்கு முரண்பட்டு நிற்கும் போது, புதிதாக உருவாகக் கூடிய உறவுகள் சரியாக புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையே ஒருவித கண்ணாமூச்சி விளையாட்டுதான்.

நம் குடும்பத்தில், நண்பர்களிடத்தில், நெருங்கிய உறவினர்களிடத்தில் என்னதான் கருத்து முரண் ஏற்பட்டாலும், சிறிது காலம் பேசாமல் போனாலும் அல்லது அவர்கள் பேசுவதற்கு முன் வந்தாலும் உரையாடலைத் தயங்காமல் தொடங்குங்கள். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப, கோபத்தில் பேசப்படும் அல்லது மனம் நிதானமில்லாமல் இருக்கும் போது பேசும் வார்த்தைகளுக்கு பெரிதாக அர்த்தங்கள் கிடையாது.

எத்தனை நபர்களை ஒதுக்கிவிட முடியும். ஒவ்வொரு மனிதனும் இதேபோல் கோபமும், நிதானமும் இழந்து நிற்கும்போது, உதிர்க்கும் வார்த்தைகளை நம்மால் தாங்க முடியாது. அப்பொழுதும் ஓடிக் கொண்டிருக்க முடியாது. அதனால் நமக்கான மனிதர்களை என்றைக்கும் விட்டு ஒதுங்காமல், இயல்பான உரையாடலைத் தொடர வேண்டும்.

அதுவே உங்களுடைய பேச்சின் தன்மையையும், மனப் பக்குவத்தையும், உறவுகளைத் தக்க வைக்கும் முறையையும் அடுத்த தலைமுறைக்கு எளிதாக எடுத்துக் கூற முடியும். இன்றைக்கு இப்படிப்பட்ட நபர்களுக்குதான் அரசியல் தளங்களிலும், பெரிய நிறுவனங்களிலும், உயர் பதவிகளிலும் வாய்ப்புகளை அள்ளி வழங்குகிறார்கள். அதுதான் மனித மேலாண்மை என்று இன்றைக்கு கொண்டாடப்படுகிறது.

மனநல ஆலோசகர்: காயத்ரி மஹதி

The post மூளையின் முடிச்சுகள் appeared first on Dinakaran.

Related Stories: