×

நன்மை செய்யும் மூலிகை தேநீர்!

நன்றி குங்குமம் டாக்டர்

காலை எழுந்ததும் காபி, டீ பருகும் பழக்கம் உடையவர்கள் பலரும் தற்போது, காபி, டீக்கு மாற்றாக மூலிகை டீயை பருகுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். முலிகை டீ பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.மூலிகை டீ ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இது செரிமானம், நச்சுத்தன்மை, எடை இழப்பு உட்பட குறிப்பிட்ட நன்மைகளை வழங்குகிறது. ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த இது உடலை ஆரோக்கியமாக்குவதோடு மனதை அமைதிப்படுத்தவும் புத்துணர்ச்சியாக வைக்கவும் உதவுகிறது.

மூலிகை டீயை பொருத்தவரை கோடைகாலத்தைவிட, குளிர்காலத்தில் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக சளி இருமலை எதிர்த்து இந்த மூலிகை டீ போராடும் என்றும் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மூலிகை டீ உடலுக்கு நன்மை செய்தாலும், டீ தயாரிப்பு முறையில் செய்யும் ஒருசில தவறுகளால் உடல்நல பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அவை என்னவென்று பார்ப்போம்:

உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்காக மூலிகை டீ பருகும்போது, இதில் சர்க்கரை சேர்த்து பருகுவதை தவிர்த்துவிட்டு தேன் சேர்த்து பருகலாம்.  உடல் பருமனை குறைப்பதற்கு முயற்சிப்பவர்கள் தேன் கலந்து பருகுவது நல்ல பலனை கொடுக்கும். அதேசமயம், சூடாக இருக்கும் மூலிகை டீயில் ஒருபோதும் தேன் கலந்துவிடக்கூடாது. டீ மிதமான சூட்டிற்கு வந்தபிறகே தேன் கலக்க வேண்டும்.

மூலிகை டீயை அதிக சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பருகக்கூடாது. மிதமான சூட்டில் பருகுவதே சிறந்தது. மூலிகை டீயை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தி பருகக்கூடாது. அப்படி பருகினால் மூலிகையில் உள்ள சத்துக்கள் அழிந்துவிடும். பித்தம் சம்பந்தமான பிரச்னை உடையவர்கள் கோடை காலங்களில் மூலிகை டீ பருகுவதை தவிர்ப்பது நல்லது.

ஜீரணமாகாத உணவு சாப்பிடும்போது மூலிகை டீ குடிப்பது நல்லது என்றும் இஞ்சி டீ புதினா சோம்பு ஆகியவற்றை சேர்த்து பருகினால் உடல் பாதிப்புகளை தடுக்க உதவும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே சாதாரண டீ காபி குடிப்பதை விட மூலிகை டீ குடித்தால் உடலுக்கு நன்மை பயக்கும்.

தொகுப்பு: ரிஷி

The post நன்மை செய்யும் மூலிகை தேநீர்! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kumkum ,
× RELATED சிறுநீரில் ரத்தமா?