?மூன்றாம் பிறை, நான்காம் பிறை என்கிறார்கள், நாம் தரிசிக்க வேண்டிய பிறை எது?
– ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
இரண்டும் இல்லை. பஞ்சாங்கத்தில் தெள்ளத் தெளிவாக சந்திர தரிசனம் என்று குறிப்பிட்டிருப்பார்கள். அந்த நாளில் சந்திர தரிசனம் செய்ய வேண்டும். இது பெரும்பாலும் அமாவாசையை அடுத்த இரண்டாவது நாளில், அதாவது த்விதியை திதி சம்பவிக்கும்போது வரும். பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருக்கும் இந்த நாளில் நிச்சயமாக சந்திரன் கண்ணுக்குப் புலப்படும். அந்த நாளில் சந்திர தரிசனம் செய்வதே நல்லது. வளர்பிறையின் துவக்கத்தில் சந்திரனை தரிசிக்க வாழ்விலும் வளர்ச்சி பெறுவோம் என்பதே இதன் தாத்பரியம் ஆகும்.
?கோயிலில் ஏலம் விடும் புடவைகளை வாங்கி உடுத்திக் கொள்ளலாமா?
– வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
உடுத்திக் கொள்ளலாம். கோயிலில் அம்மனுக்கு சாற்றிய புடவைகளை பக்தர்கள் வாங்கிப் பயன்படுத்தி பலன் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன்தான் ஏலம் விடுகிறார்கள். அம்மனுக்கு சாற்றிய புடவையை பெண்கள் வாங்கி உடுத்துவதில் எவ்வித தவறும் இல்லை. இந்த உலகில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் என அத்தனையும் இறைவனால் படைக்கப்பட்டவையே. அம்பிகைக்கு நைவேதியம் செய்த உணவினை பிரசாதமாக எண்ணி, வரிசையில் நின்று வாங்கி சாப்பிடும்போது, அம்மனுக்கு சாற்றிய புடவையை வாங்கி அணிந்து கொள்வது மட்டும் எவ்வாறு தவறாகும்…? மனிதர்களாகிய நாம் அணிந்து பார்த்த வஸ்திரத்தை அது புதிதாய் இருந்தால்கூட அம்பிகைக்கு அர்ப்பணிக்கக் கூடாது.
மாறாக அம்மன் வஸ்திரத்தை பெண்கள் வாங்கி உடுத்துவதால் நன்மையே உண்டாகும். மாதவிலக்கு நாட்கள் தவிர மற்ற நாட்களில் பெண்கள் தாராளமாக அம்மனுக்குச் சாற்றிய புடவையை அணிந்து கொள்ளலாம். குறிப்பாக, பூஜை செய்யும் நேரங்களில் உடுத்துவது மிகவும் நல்லது. திருமணத்தடை காணும் பெண்கள், குழந்தைப் பேறுக்காக காத்திருப்போர், மாங்கல்ய பலம் வேண்டுவோர் மட்டுமல்லாது வீட்டினில் அம்மனின் அருள் நிறைந்திருக்க பிரார்த்தனை செய்வோர் யாவரும் கோயிலில் ஏலம் விடும் புடவைகளை வாங்கி உடுத்திக் கொள்ளலாம். அதில் தவறேதும் இல்லை.
?அபிஜித் நட்சத்திரம் என்றொரு நட்சத்திரம் இருக்கிறதா?
– வித்யா, சேலம்.
27 நட்சத்திரங்களுக்கு மத்தியில் இருபத்தி எட்டாவதாக ஒரு நட்சத்திரம் உள்ளது என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதுதான் அபிஜித் நட்சத்திரம். உத்திராடத்திற்கும் திருவோணத்திற்கும் நடுவில் இடம் பெற்றிருக்கக் கூடிய நட்சத்திரம் என்கிறார்கள். இது மகர ராசியில் அமைந்திருக்கிறது. உத்திராடம் 4ஆம் பாதம் மற்றும் திருவோணம் 1, 2 ஆம் பாதத்தில் வரக்கூடிய நட்சத்திரம். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவினுடைய தலையில் இருக்கக் கூடிய மயிலிறகுதான் `அபிஜித்’ என்கிறது மகாபாரதம்.
?பதினெட்டு புராணங்கள் என்பவை யாவை? இவை யாரால் இயற்றப்பட்டவை?
– சண்முகம், தஞ்சாவூர்.
மத்ஸ்ய புராணம், மார்க்கண்டேய புராணம், பாகவத புராணம், பவிஷ்ய புராணம், பிரஹ்ம புராணம், பிரம்மாண்ட புராணம், பிரஹ்மகைவர்த்த புராணம், வராஹ புராணம், வாமன புராணம், வாயு புராணம், விஷ்ணு புராணம், அக்னி புராணம், நாரத புராணம், பத்ம புராணம், லிங்க புராணம், கருட புராணம், கூர்ம புராணம், ஸ்காந்த புராணம் ஆகியவை 18 புராணங்கள். இந்த 18 புராணங்களும் ஸூதபௌராணிகர் என்பவரால் சொல்லப்பட்டு வேத வியாஸரால் எழுதப்பட்டவை.
?கணவனை இழந்த பெண்கள் காலில் கொலுசு அணியலாமா?
– துளசிலக்ஷ்மி, காரனோடை.
அது அந்தப் பெண்ணின் மனநிலையைப் பொறுத்தது. சர்ச்சைக்கு உரிய உங்கள் கேள்விக்கான பதிலை சற்று விளக்கமாகவே காண்போம். உண்மையில் நமது இந்து மத பழக்கவழக்கத்தின்படி கணவனை இழந்த பெண்கள் எந்த வகையான அணிகலன்களையும் அணிந்துகொள்ளக் கூடாது. கணவனை இழந்தபின் வேறெந்த சிந்தனையும் இன்றி துறவு வாழ்வு மேற்கொள்ள வேண்டும் என்று இந்துமத சம்பிரதாயம் அறிவுறுத்தினாலும், கால தேச வர்த்தமானத்திற்கு ஏற்றாற்போல் ஒரு சில சம்பிரதாயங்களை மாற்றிக் கொள்வதில் தவறில்லை என்பது பொதுவாக எல்லோருடைய எண்ணமாக இருக்கிறது. கொலுசு, தோடு, மூக்குத்தி, செயின் முதலான அணிகலன்களை திருமணத்திற்கு முன்பிருந்தே பெண்கள் அணிவது வழக்கம். திருமாங்கல்யமும் கால் விரலில் அணியும் மெட்டியும்தான் திருமண ஆன நாள் முதலாக பெண்கள் தங்கள்வாழ்நாளில் புதிதாக சேர்த்துக் கொள்ளும் அணிகலன்கள். இதனைக் கருத்தில் கொண்டு தற்காலத்தில் கணவனை இழந்த பெண்கள் திருமாங்கல்யத்தையும், கால்விரலில் அணியும் மெட்டியினை மட்டும் தவிர்த்து மற்ற அணிகலன்களை அணிந்து கொள்கிறார்கள்.
தற்காலச் சூழலில் இதில் தவறேதும் இல்லை என்பதால், பெரியவர்கள் இந்த நடைமுறையை அனுமதிக்கிறார்கள். உறுதியான மனக்கட்டுப்பாடு என்பது மட்டுமே பெண்களுக்கான வேலி. இந்த மனக்கட்டுப்பாட்டினை ஆடை, ஆபரணங்களில்தான் வெளிப்படுத்த வேண்டும் என்று அவசியமில்லை. கணவனை இழந்த பெண்ணின் மனம் துறவற வாழ்வினை விரும்பாமல் பொதுவாக மற்ற பெண்களைப் போல் வாழ விரும்பினால் அவர் கொலுசு உட்பட பிற ஆபரணங்களை அணிந்துகொள்வதில் தவறேதும் இல்லை.
?அமாவாசை நாட்களில் முடிவெட்டுதல், ஷேவிங் செய்து கொள்ளுதல் கூடாது என்கிறார்களே, ஏன்?
– கே.ஆர்.எஸ்.சம்பத், திருச்சி.
அமாவாசை என்பது முன்னோர்களின் வழிபாட்டிற்கு உரிய நாள். பொதுவாக முன்னோர்களை வழிபடும்போது அதிகப்படியான ஆச்சார அனுஷ்டானங்கள் என்பது அவசியமாகிறது. அந்நாளில் முன்னோர்களின் நினைவாக சிரத்தையுடன் அவர்களை வழிபட வேண்டுமே தவிர தன்னை அழகுபடுத்திக்கொள்ளும் பணிகளில் இறங்கக் கூடாது. பித்ருக்களுக்கு உரிய நாளில் முடிவெட்டுதல் அல்லது முகச்சவரம் செய்யக்கூடாது என உறுதியாகச் சொல்கிறது தர்மசாஸ்திரம்.
?எல்லோரும் புரிந்துகொள்ளும் ஒரு மொழி இருக்கிறதா?
– தாசபிரகாஷ், துவாக்குடி.
ஏன் இல்லை? அந்த மொழிக்கு புன்னகை என்று பெயர். அதை எல்லா மொழியினரும் புரிந்துகொள்ள முடியும். ஒரு சின்னக் குழந்தைகூட உங்கள் புன்னகையைப் புரிந்துகொண்டு, அதற்குப் பதில் சொல்லும். எனவே, இதைவிட சிறந்த மொழி வேறு இருக்க முடியாது.
The post மூன்றாம் பிறை, நான்காம் பிறை என்கிறார்கள், நாம் தரிசிக்க வேண்டிய பிறை எது? appeared first on Dinakaran.