×

ஏன் ?எதற்கு ? எப்படி ?

?துலா ஸ்நானம் என்றால் என்ன?
– சோமசேகரன், வேலூர்.

ஐப்பசி மாதத்திற்கு “துலாமாதம்’’ என்று பெயர். ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால், இந்த மாதத்தினை துலா மாதம் என்று அழைப்பர். பஞ்சாங்கத்தில் ஐப்பசி மாதம் முதல் நாள் அன்று, துலாஸ்நான ஆரம்பம் என்றும், கடைசி நாளில் “கடைமுகம்’’ என்றும் குறிப்பிட்டிருப்பர். துலா மாதம் என்றழைக்கப்படும் ஐப்பசி மாதம் முழுவதும் கங்கைக்கு இணையான புண்ணிய நதியான காவேரியில் கங்கா தேவியானவள் பிரவாகிப்பதாக புராணங்கள் உரைக்கின்றன. தான் செய்த பாவங்களைக் கழிக்க எல்லோரும் கங்கையில் நீராடுகின்றனர். உலகத்தாரின் பாவ மூட்டைகளைச் சுமக்கும் கங்காதேவியானவள், அதிலிருந்து விடுபட்டு தன்னைப் பொலிவு ஆக்கிக்கொள்ள வேண்டி காவேரிக்கு வந்து ஸ்நானம் செய்யும் காலமே இந்த ஐப்பசி மாதம். கங்கா தேவியே தனது பாவத்தினைப் போக்கிக்கொள்ள காவேரியை நோக்கி ஓடிவருகிறாள் என்றால், நமது காவேரியின் மகத்துவத்தைச் சொல்லவும் வேண்டுமா..! ஆக இந்த ஐப்பசி மாதத்தில் என்றாவது ஒரு நாள் நாமும் காவேரிக்கரைக்குச் சென்று துலாஸ்நானம் செய்து கங்கை – காவேரி இரண்டிலும் ஒருசேர நீராடும் பாக்கியத்தை அடைவோம். நலம் பெறுவோம்.

?துர்காஷ்டமி என்ற நாளை விசேஷமாகச் சொல்கிறார்களே… துர்கைக்கும் அஷ்டமிக்கும் தொடர்பு உண்டா? துர்காஷ்டமி நாளின் மகிமை என்ன?
– ராமகிருஷ்ணன், புதுக்கோட்டை.

துர்கைக்கும் அஷ்டமிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம். உங்களின் கேள்விக்கு நீண்ட விளக்கம் கொடுத்தால், நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.சிறையில் இருந்த வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது மகனாக கிருஷ்ணன் அவதரித்த அதே நேரத்தில், நந்தகோபனின் மனைவி யசோதைக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இறைவனின் ஆணைப்படி வசுதேவர் யாருக்கும் தெரியாமல் இந்த இரு குழந்தைகளையும் இடம்மாற்றி வைத்துவிடுகிறார். குழந்தை பிறந்த செய்தியறிந்த கம்சன், சிறைக்கு வந்து வசுதேவரால் இடம் மாற்றி வைக்கப்பட்ட பெண் குழந்தையை வீசியெறிந்து கொல்ல முயற்சிக்கும்போது, அவன் கையில் இருந்த குழந்தை உயரே பறந்து துர்கையாக காட்சியளித்தாள் என்பதை புராணத்தில் படிக்கிறோம். அப்படியென்றால், கிருஷ்ணன் அவதரித்த அதே அஷ்டமியில்தான் துர்கையும் அவதரித்திருக்கிறாள் என்பது புலனாகிறது. துர்கை பிறந்தது அஷ்டமி திதியில் என்பதால், அம்பிகைக்கு மிகவும் உகந்த நவராத்தியில் வருகின்ற அஷ்டமி நாள் “துர்காஷ்டமி’’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களும் மிகவும் சக்தி வாய்ந்தது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. துர்காஷ்டமி, மஹாநவமி, விஜயதசமி என்று இந்த நாட்கள் போற்றப்படுகின்றன. குறிப்பாக, துர்காஷ்டமி என்றும் மஹாஷ்டமி என்றும் வீராஷ்டமி என்றும் நாட்டின் பல பகுதிகளிலும் கொண்டாடப்படுகின்ற நவராத்திரியின் எட்டாம் நாள் அபரிமிதமான சக்தியைப் பெற்ற நாள் என்பது அனுபவ பூர்வமாக பலரும் அறிந்த உண்மை.

வராஹ புராணத்தில், அக்ஞான ரூபமான மஹிஷன் என்ற அசுரன் அம்பிகை எனும் ஞானத்தினால் அழிக்கப்படுவதால், துர்காதேவி ஞானசக்தி என்று போற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூற்றினை மெய்ப்பிக்கும் விதமாக, துர்காஷ்டமி நாளன்று விசேஷ யாகங்களைச் செய்து மனநிலை சரியில்லாதவர்களைக் கூட ஒருநிலைப்படுத்தி அவர்களை சரிசெய்த அதிசயங்களும் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மஹிஷாசுரனோடு யுத்தம் நடந்த காலத்தில் இந்த துர்காஷ்டமி நாளன்று, சண்ட – முண்டர்களையும், ரக்தபீஜன் எனும் அரக்கனையும் அடியோடு நாசம் செய்வதற்காக துர்காதேவியின் நெற்றியிலிருந்து காளிதேவி தோன்றியதாகக் கூறுவார்கள். கொல்கத்தா போன்ற நகரங்களில் துர்காஷ்டமி நாளன்று மிக விசேஷமாக காளி பூஜை செய்யப்படுவதை இன்றும் காண்கிறோம். அன்றை தினத்தில் துர்காதேவியின் 64 யோகினிகளும், பிராஹ்மணி, மாஹேஸ்வரி, காமேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, நாரசிம்ஹி, இந்த்ராணி, சாமுண்டா ஆகிய அஷ்ட சக்திகளும் ஒன்றாக இணைந்து செயல்படுவதாக அம்பிகையின் உபாசகர்கள் கூறுகிறார்கள். மேலும், துர்காதேவியின் மற்ற வடிவங்களான சைலபுத்ரி, பிரம்மசாரிணி,
சந்திரகாந்தா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி, காலராத்ரீ, மஹாகௌரி, சித்திதாத்ரி ஆகிய நவதுர்கைகளும் ஒன்றாக இணைந்து துர்காஷ்டமி நாளன்று நமக்கு அருள்புரிவதாக ஐதீகம்.

இவர்களில், குறிப்பாக சித்திதாத்ரி தேவி அஷ்டமாசித்திகள் எனப்படும் அனிமா, மஹிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகம்யா, இஷித்வா, வஷித்வா ஆகியவற்றை தன்னிடத்தே கொண்டவள். சிவபெருமான் மஹாசக்தியைப் பிரார்த்தித்து இந்த அஷ்டமாசித்திகளை அடைந்ததாக தேவிபுராணம் கூறுகிறது. மஹிஷாசுரமர்த்தினி, துர்கமன் என்ற அசுரனை அழித்ததால் துர்கை என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள். சர்வ துக்கங்களையும் போக்கிடும் இந்த துர்கா தேவியானவள், அவளது உபாசகர்களால் சூலினி துர்கா, வனதுர்கா, சாந்தி துர்கா, ஜாதவேதோ துர்கா, தீப துர்கா, ஜ்வாலா துர்கா, ஆசுரீ துர்கா என்று விதவிதமான மந்திரங்களால் பலவிதமாகப் போற்றப்படுகிறாள். துர்கா பூஜையில் ஈடுபட்டவர்களுக்கு கடன், சோகம், பிசாசு ஆகியவற்றால் பீடை உண்டாகாது என்றும், துர்கையின் பெயரை உச்சரிப்பதனாலேயே மனிதன், புத்திர பௌத்திர விருத்தியையும், சுபிட்சத்தையும், தன விருத்தியையும் பெற்று மிகுந்த பாக்கியசாலி ஆகிறான்.

சர்பங்கள், ராட்சசர்கள், பூதங்கள், சத்ருக்கள், ரோகங்கள் இவையாவும் துர்கா பக்தனைப் பார்த்த மாத்திரத்திலேயே திசைதோறும் ஓடுகின்றன என்றும் தேவீ பாகவதத்தில் வியாச பகவான் கூறுவதே இதற்கு ஆதாரம். மேலும், துர்கா எனும் சப்தத்திலேயே தகாரம், உகாரம், ரேபம், சுகாரம், ஆகாரம் என்ற ஐந்து வர்ணங்கள் உள்ளன. இவற்றில் தகாரமானது அசுரர்களின் அழிவையும், உகாரம் விக்ன நாசனத்தையும், ரேபம் ரோக நிவாரணத்தையும், சுகாரம் பாபம் தொலைவதையும், ஆகாரம் பயம், சத்ரு இவர்களின் அழிவையும் குறிக்கும். துர்கையின் பெயரை உச்சரிப்பவன் மேற்சொன்ன பலன்களை அடைவான் என்பது நிதர்சனமான உண்மை. ஆக, சத்ரு (எதிரி), ரோகம் (வியாதி), ருணம் (கடன்), ஆவி போன்ற அமானுஷ்ய சக்திகளால் உண்டான தொல்லைகள், சித்த பிரமை, பில்லி, சூனியம், ஏவல், பரம்பரையில் ஏற்பட்ட சாபங்கள், நாக தோஷம், புத்திர தோஷம் இன்ன பிற குறைகளாலும் அவதிப்படுபவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் வருகின்ற சர்வசக்தி படைத்த இந்த துர்காஷ்டமி நாளன்று விரதம் இருந்து தங்கள் சக்திக்கு இயன்ற அளவில் துர்கைக்கு பூஜை செய்து வழிபட சர்வ தோஷங்களும் விலகி வாழ்வினில் வளம் பெறுவார்கள் என்பதே இந்த நாளின் மகத்துவம் ஆகும்.

The post ஏன் ?எதற்கு ? எப்படி ? appeared first on Dinakaran.

Tags : Somasekaran ,Vellore ,Sun ,Panjang ,
× RELATED சோலார் மின்வேலி அமைக்க நடவடிக்கை...