பகுதி – 1
ஜடாயு உயர உயர பறந்து கொண்டே இருந்தார். கருடன் ஜடாயுவை ‘இன்னும் கொஞ்சம் உயரம் வா’ என்று ஊக்கப்படுத்திக் கொண்டே கூடவே பறந்து வந்தார். மேலும் உயரம் அடைய ஜடாயுவிற்கு மூச்சு வாங்கியது. வானத்தின் நீல வண்ணம் மறைந்து போனது. எங்கும் வெள்ளை ஒளி பிரவாகமாய் இருந்தது. கொஞ்சம் உற்று நோக்க தசரதர் இரு கரம் நீட்டி, ‘‘வா! என் அருகில் வா!” என்று கூறுவது கேட்டது. ஜடாயு அவர் அருகில் செல்ல ஒளி வெள்ளத்தில் தசரதர் காணாமல் போயிருந்தார். கூடவே வந்த கருடனையும் காணவில்லை. திடீரென்று சம்பந்தமே இல்லாமல் தான் யார் மடியிலோ தலை வைத்துப் படுத்திருப்பதை உணர்ந்தார். கரு நாவல் பழத்தின் நிறம் கொண்ட ஒரு கரம் அவர் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்தக் கரம் யாருடையது என்று உணரும் முன்னே கனவு கலைந்து விட்டது.
இந்த அதிகாலை கனவு என்ன சொல்ல வருகிறது? எதுவானாலும் பரம்பொருள் பார்த்துக் கொள்ளும் என்று தனக்குள் சொல்லிக் கொணடார். அடர்ந்த அந்த காட்டை மூன்று முறை வலம் வந்தார். பின் கோதாவரி ஆற்றில் மூன்று முறை முங்கி எழுந்தார். காட்டின் நடுவே அமைந்திருந்த ஆலமரத்தின் உச்சியில் முதிர்ந்த தவசி போல உட்கார்ந்தார்.
அந்த அதிகாலைப் பொழுதில் பறவைகள் இரை தேட பறக்கத் துவங்கின. அவற்றை எல்லாம் ஆசீர்வாதம் செய்வது போல் தனது கழுத்தை பக்கவாட்டில் அசைத்து ஆசீர்வதித்தார். இனம் புரியாத ஒரு உற்சாகம் ஜடாயுவிற்கு மனதில் தோன்றி மறைந்தது. வெகு தொலைவில் பார்த்த போது மூவர் நடந்து வருவதைக் கண்ணுற்றார். மரவுரி தரித்த அவர்கள் மிகுந்த பிரகாசத்துடன் காணப்பட்டார்கள். கருநீல வண்ணத்துடன் ஒருவனும் செந்நிற வண்ணத்துடன் மற்றொருவனும் மிகவும் மங்களகரமான ஒரு பெண்ணும் வருவது தெரிந்தது.
இவர்கள் முனிவர்களாக இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்தார். தேவர்களை விடவும் மிகவும் பொலிவுடன் காணப்படுவதையும் கண்டார். தன்னுடைய பார்வையை கூர்மையாக்கியபோது, இருவரும் தனது தோழன் தசரதன் உருவத்தை ஒத்து இருப்பதை அறிந்து கொண்டார். ஒருவர் மட்டும் என்றால் தசரதனாக இருக்கக்கூடும் என நினைக்கலாம். ஆனால், இருவரும் ஒன்று போலவே இருக்க, ஜடாயுவிற்கு அவர்கள் அருகில் செல்ல ஆவல் மிகுந்தது. இறக்கையை விரித்தார். விரைந்து பறந்தார். அவர்கள் அருகில் சென்றடைந்தார்.“தாங்கள் மூவரும் யார்?’’ என்று வினவினார்.
“நான் ராமன். இவன் எனது இளவல் இலக்குவன். நாங்கள் அயோத்தி பேரரசன் தசரதனின் புதல்வர்கள். இவள் என் மனைவி சீதா. வனவாசத்திற்காக நாங்கள் மூவரும் இங்கு வந்திருக்கிறோம்’’ என கைகூப்பி வணங்கி ராமன் அறிமுகப்படுத்திக் கொண்டான். தசரதன் என்ற ஒற்றைச் சொல்லை கேட்டவுடன் ஜடாயுவிற்குசந்தோஷம் மிகுந்தது. “நான் ஜடாயு. ஒப்பற்ற தசரதனின் உற்ற உயிர்த் தோழன்’’ என சொல்லியபடி தன் அலகினால் ராமனின் உச்சியை முகர்ந்தார். இறக்கைகளினால் தழுவிக் கொண்டார். அந்த அணைப்பில் தசரதனின் அருகாமையை உணர்ந்தார். அவரின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது. இலக்குவனையும் சீதாவையும்ஆசீர்வதித்தார்.
“என் தசரதன் எப்படி இருக்கிறான்? என் தோழன் எப்படி இருக்கிறான்? எனக்கு எப்பொழுதுமே தசரதனுடன் இருக்க வேண்டும் என்று தோன்றும். இன்று உங்கள் இருவரையும் சந்தித்தவுடன் அவனை உடனே பார்த்தாக வேண்டும் என்று மனது துடியாய் துடிக்கிறது. அவன் எங்கே இருக்கிறான்? எப்படி இருக்கிறான்? நலமாய் இருக்கிறானா?” கேள்விகளாய் கேட்டபடி இருந்தார்.
ராமன் ஜடாயுவின் அருகில் சென்றான்.
கைகளைப் பற்றிக் கொண்டான். அவரின் கண்களை உற்றுப் பார்த்தபடி, “இல்லை. உயிருடன் இல்லை. உங்களின் தோழன், எங்களின் தந்தை, தசரதன் உயிருடன் இல்லை. மறைந்து விட்டார்’’ விம்மலுடன் கூறினான். தசரதன் இறந்த செய்தியைக் கேட்ட அந்தக் கணமே ஜடாயு மூர்ச்சையாகி ராமன் மேல் சரிந்தார். பின் நிலத்தில் விழுந்தார். ராமன் மண்ணில் அமர்ந்து ஜடாயுவை மடியில் கிடத்திக் கொண்டான். முகத்தில் நீர் தெளித்து மூர்ச்சை தெளிவித்தான்.
“தசரதன் இறந்து விட்டானா? நம்ப முடியவில்லை. ராமா! நீ சொல்வதினால் உண்மையாகத்தான் இருக்கக்கூடும். என்னை, உன்னை, உங்களை எல்லாம் அனாதையாக்கி விட்டுச் செல்ல அவனுக்கு எப்படி மனது வந்தது?’’ ராமன் ஜடாயுவின் கண்ணீரைத் துடைத்தான். இலக்குவன் நடந்தவற்றையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வனவாசம் வந்த விவரம் வரை எல்லா நிகழ்வுகளையும் கூறி முடித்தான்.
“ராமா! தசரதன் இப்போது நம்மோடு இல்லை. இதுதான் நிஜம். எல்லோருக்கும் வருத்தமாய்த்தான் இருக்கும். ஆனால், மூன்று பேருக்கு மட்டும் மிகுந்த சந்தோஷமாய் இருக்கக்கூடும். முதலானவன் சந்திரன். ஏனெனில் தசரதனின் வெண்கொற்றக் குடைக்கு ஈடான வெண்மை அவனிடத்தில் இல்லை. இனி தசரதனே இல்லாத போது வெண்கொற்றக் குடையும் இல்லை, வெண்மையும் இல்லை. சந்திரன், தான் மட்டும்தான் இனி பிரகாசமானவன், வெண்மையானவன் என்ற நினைப்பில் சந்தோஷப்படுவான்.
இரண்டாவதாக பூமாதேவி. தசரதன் இருக்கும் வரையில் பொறுமையின், சகிப்புத்தன்மையின் உச்சம் அவன் மட்டுமே. இனி அந்தப் பெருமை பூமாதேவிக்குச் சென்றடையும். மூன்றாவது கற்பக விருட்சம். தசரதன் உயிருடன் இருந்த வரையில் புரவலருக்கெல்லாம் புரவலனாக இருந்தான். அவனிடம் தானம் பெற்றவர்கள் ஒவ்வொருவரும்தான் தானம் செய்யும் அளவிற்கு வளர்ந்து விடுவார்கள். தசரதன் இல்லை, இனி அந்தப் பெருமை கற்பக விருட்சத்திற்கு சென்றுவிடும்.’
“ராமா! தசரதன் பொய்க்கு பகையானவன், மெய்க்கு அணியானவன், புகழின் வாழ்வானவன். அவன் மறைவு இந்த யுகத்தின் மாபெரும் சோகம்! ராமா! தசரதன் இல்லாததினால் யாசகர்கள் அனாதையாகி விட்டார்கள். இனி அவர்களுக்கு யாரும் இல்லை. தர்மம் அனாதை ஆகிவிட்டது. தசரதன் இன்றி தர்மம் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக நான் அனாதையாகி விட்டேன். எனக்கு இருந்த ஒரே தோழன் தசரதன்தான்.’’
“ராமா! தசரதன் உன்னிடம் பகிர்ந்து கொண்டானா என்று எனக்கு தெரியவில்லை. சம்பாசுரனுடன் போர் நிகழ்ந்தது. அப்பொழுது என்னால் முடிந்த சிறு உதவியை தசரதனுக்குச் செய்தேன். அதை தசரதன் சொல்லிச் சொல்லி கொண்டாடித் தீர்த்து விட்டான். போர் முடிந்ததும் என்னைக் கட்டி அணைத்து முத்தமிட்டான். ‘உயிர் நீ! உனக்கொரு உடல் நான்! இது சத்தியம் என்றான்.’ அப்படிச் சொன்னவன் எப்படிச் சத்தியத்தை மறந்து என்னையும் விட்டுப் பிரிந்தான்? என்னால் தாங்க முடியவில்லை.
எமன் எப்படிப்பட்ட முட்டாள்! தசரதனின் உயிரான நான் இங்கே உயிருடன் இருக்க, அவனுடைய உடலை மட்டும் இட்டுச் சென்று விட்டானே!”“ராமா! இனி நான் உயிர் வாழ்வதில் அர்த்தம் ஒன்றுமில்லை. தசரதன் சென்ற இடத்திற்கு நானும் சென்று விடுவதுதான் உத்தமம். தசரதனை பார்க்க இயலாவிட்டாலும் அவன் புதல்வர்கள் உங்கள் இருவரையும் பார்த்ததே எனக்கு திருப்தி. என் மருமகளையும் உன்னுடன் சேர்த்து பார்த்து விட்டேன். ராமா! நீங்கள் கிளம்புங்கள் நான் தீயை மூட்டி உயிரைப் போக்கிக் கொள்கிறேன்.’’
ஜடாயு கூறியதைக் கேட்டவுடன் ராமன், “பெரியப்பா! என்ன கூறுகிறீர்கள்? உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். எங்களுக்காக நீங்கள் வாழத்தான் வேண்டும். தந்தை தசரதன் இல்லாத இவ்வுலகில் எங்களை வழிநடத்த உங்களைவிட, உங்களைத் தவிர யார் இருக்கிறார் பெரியப்பா?” ஜடாயுவின் பாதத்தில் மண்டியிட்டு முறையிட்டான்.
“ராமா! நீ என்னை பெரியப்பா என்று அழைத்துவிட்டாய். உன் வார்த்தையை மீறி நான் என்ன செய்ய முடியும்? ஆனால், நீ என்னுடைய ஒரு வேண்டுகோளுக்கு ஒத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் வனவாசம் முடிந்து அயோத்தி செல்லும் வரையில் நான் உங்களுடன் இருப்பேன். பின் என் உயிரை மாய்த்துக் கொள்வேன்.’’
“அப்படிச் சொல்லாதீர்கள் பெரியப்பா! எங்களை வழிநடத்த நீங்கள் இருக்கிறீர்கள் என்பது எங்களுக்கு மிகுந்த பலம்.”
“ராமா! உன் பேச்சுக்கு மறுபேச்சு யாராவது பேசுவார்களா? நீங்கள் மூவரும் இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள். அதற்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன்.”
“மன்னிக்க வேண்டும், பெரியப்பா! அகத்திய மாமுனிவர் எங்களை கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள பஞ்சவடி ஆசிரமத்தில் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.”
“அப்படியே ஆகட்டும். தசரதன் தெய்வமாக இருந்து உங்களை வழிநடத்துவான்.
நானும் உங்களின் பாதுகாப்பிற்காக உங்கள் கூடவே இருப்பேன்.” ராமன், சீதா, இலக்குவன் மூவரும் பஞ்சவடியை நோக்கி புறப்பட்டார்கள். ஜடாயு இரண்டு இறக்கைகளையும் விரித்து பறந்தபடி வழிகாட்டினார். கோதாவரியின் கரையில் அமைந்த பர்ண சாலையில் ராமரும் சீதையும் வசிக்கத் துவங்கினார்கள். இலக்குவன் அவர்களுக்கு காவல் இருந்தான். ஜடாயு தன் இருப்பிடம் சேர்ந்தார்.
சில மாதங்கள் கழிந்தன. ஒரு நாள் அதிகாலையில் ஜடாயு தியானத்தில் ஆழ்ந்திருந்தார். ஆந்தையின் அலறல் சத்தம் கேட்டது. பறவைகள் இடதும் வலதுமாக பறந்தன. ஜடாயுவின் மனதில் ஏதோ ஒரு அச்சம் துளிர்த்தது. வானத்தை உற்று நோக்கியபடி இருந்தார். வானில் ஒரு தேர் வேகமாக நகர்வதைக் கண்ணுற்றார். தனது கூர்மையான பார்வையில் அந்த தேரில் பத்து தலைகளுடன் ஒரு ராட்சசன், பெண் ஒருவரை கவர்ந்து செல்வதைக் கண்டு பதைபதைத்தார். உயரப் பறந்து தேரின் அருகில் சென்றார். அந்தப் பெண் சீதாதேவி என்பதையும் அந்த ராட்சசன் ராவணன் என்பதையும் உணர்ந்தார்.“எங்கு செல்கிறாயடா? நில்! நில்!’’ என்று ஜடாயு சொல்லிக் கொண்டே தேரை நெருங்கினார். ஊழிக்காற்றின் வேகத்துடன்ராவணன் அருகில் சென்றார்.
(தொடரும்…)
கோதண்டராமன்
The post ஜடாயு பெரியப்பா… appeared first on Dinakaran.