×

கிறிஸ்துமஸ் உணர்த்தும் பாடம்

ஒரு இளம் தம்பதியினரிடம் பணத்தைக் காட்டிலும் அன்பே அதிகமாயிருந்தது. கிறிஸ்துமஸ் நெருங்கியபோது இருவருமே ஒருவர்மீது ஒருவர் எத்தனை கரிசனை கொண்டுள்ளனர் என்பதைக் காட்டும்படியாக ஒரு பரிசுப் பொருளைக் கண்டுபிடிக்க போராடிக் கொண்டிருந்தனர். கடைசியாக கிறிஸ்துமஸ் மாலையில், டெல்லா தன்னுடைய முழங்கால் அளவு நீண்ட கூந்தலை விற்று, தன் கணவன் ஜிம் தன் தாத்தாவும், தந்தையும் பயன்படுத்திக் கொடுத்த கைக் கடிகாரத்திற்கு பிளாட்டினத்தால் ஆன சங்கிலியை வாங்கினாள். ஜிம் தன்னுடைய கைக்கடிகாரத்தை விற்று தன் மனைவியின் கூந்தலுக்கு விலையேறப்பெற்ற அழகான கிளிப்களை வாங்கியிருந்தான்.எழுத்தாளர் ஓ.ஹென்றி இந்த இளம் தம்பதியினரின் கதையை ‘ஞானிகளின் பரிசு’ என அழைத்தான். அவர்களுடைய பரிசு வீணாகி, கிறிஸ்துமஸ் காலைப் பொழுதில் அவர்களை முட்டாள் களாகக் காண்பித்த போதும் பரிசு கொடுத்தவர்களின் அன்பு அவர்களை ஞானிகளாக்கியது.இறைமக்களே, தியாகம் என்பது தன்னலமின்றி பிறரின் நலனுக்காக அல்லது உயர்ந்த கோட்பாட்டிற்காக செய்யப்படும் அர்ப்பணிப்பாகும். நற்சிந்தனை இல்லாமல் இத்தகைய தியாகத்தினை செய்யமுடியாது.

எனக்கு இருப்பதில் சிலவற்றை தருகிறேன் என்பது அல்ல தியாகம். என்னையே அல்லது எனக்கு அதிக பயன்பாட்டிலிருக்கும் விலையேறப்பெற்ற ஒன்றை பிரதிபலன் எதிர்பாராது தந்துவிடுவது தான் உண்மையான தியாகம். இத்தகைய அன்பைத் தான் கிறிஸ்துமஸ் நமக்கு வெளிப்படுத்துகிறது. ‘‘தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்’’ (யோவா. 3:16) என்றும், இயேசு கிறிஸ்து ‘‘தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தானே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்’’ (பிலி.2:6,7) என்றும் இறைவேதம் இயேசு கிறிஸ்துவின் தியாகம் குறித்து எடுத்துரைக்கிறது.உலகில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் வாழ்வதற்காகப் பிறக்கின்றன. ஆனால் இயேசு என்ற குழந்தையோ மக்களின் பாவங்களுக்காகக் பலியாகும் நோக்கத்திற்காகவே பிறந்தது. இதுதான் கிறிஸ்துமஸ் உணர்த்தும் அற்புத பாடம். இதை உணராமல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களில் அதிக கவனம் செலுத்தி கிறிஸ்து பிறப்பின் நோக்கத்தை மறந்துவிடாதிருங்கள். தியாகச் செம்மல் இயேசு பெருமானின் தியாக குணம் நம்வாழ்விலும் பிரதிபலிப்பதாக. இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

அருள்முனைவர்: பெ.பெவிஸ்டன்.

 

The post கிறிஸ்துமஸ் உணர்த்தும் பாடம் appeared first on Dinakaran.

Tags : Christmas ,Della ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!!