வேளச்சேரியில் வெள்ள பாதிப்பை தடுக்க வீராங்கல் ஓடையின் பக்கவாட்டு சுவர் உயரத்தை அதிகரிக்க முடிவு


* ரூ5.24 கோடியில் திட்டப்பணி
* மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னையில் வெள்ளம் வந்தாலே வேளச்சேரி, வெள்ளச்சேரியாக மாறுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. ஒரு காலத்தில் சாதாரண மழைக்கே வெள்ளத்தில் தத்தளித்து வந்த வேளச்சேரி பல கசப்பான படிப்பினைகளால் ஓரளவு பாடம் கற்றது. இதன் காரணமாக அங்கு மழை நீர் வடிகால்கள், பாதாள சாக்கடை என எல்லாமே நன்றாகவே அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அதிகப்படியான நீர் வரத்தை வெளியேற்றும் கால்வாய்கள் இருந்தால் தான், மழைக்காலங்களில் தண்ணீரை விரைந்து வெளியேற்ற முடியும். மேலும், கால்வாய்களை தூர்வாரி, அகலப்படுத்தி, தடுப்புச் சுவர் அமைத்தால் மட்டுமே சீராக மழைநீரை வெளியேற்ற முடியும். ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதற்கு சரியான திட்டமிடப்படாத நகர கட்டமைப்பே காரணம் எனக் கூறப்படுகிறது. அதேபோல், நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதும் முக்கிய காரணமாக உள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

அதேபோல், மழைநீர் வடிகால்களை அகலப்படுத்துதல், தூர்வாருதல், நீர்நிலைகளை பராமரித்தல், புதிய நீர்நிலைகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளையும் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், தென்சென்னையில் முக்கிய நீர்வழித்தடமாக இருக்கும் வீராங்கல் ஓடையின் இருபுறமும் உள்ள பக்கவாட்டு சுவரின் உயரத்தை அதிகரிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட மடுவின்கரை, ஆதம்பாக்கம், நங்கநல்லூர் மற்றும் பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட புழுதிவாக்கம், உள்ளகரம் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், அந்தந்த பகுதியில் உள்ள கால்வாய் வழியாக, வீராங்கல் ஓடையில் கலக்கிறது. பின்னர், வீராங்கல் ஓடை வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சென்று, அங்கிருந்து ஒக்கியம்மேடு வழியாக கடலில் கலக்கிறது.

மழைக்காலங்களில் மேற்கண்ட பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க, வீராங்கல் ஓடையை முழு வீச்சில் தயார்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த ஓடையில் மழைநீர் சீராக சென்றால் தான் வேளச்சேரியில் பல்வேறு பகுதிகளில் தேங்கும் வெள்ள நீர் விரைவாக வடியும். ஆனால், வேளச்சேரி, ஆதம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி வடிகால்களிலிருந்து வடியும் மழைநீர் மற்றும் வெள்ள நீரானது வீராங்கால் ஓடை வழியாகச் செல்லும் போது குப்பை கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு நீரோட்டம் தடைபடுகிறது. எனவே, இவற்றை முறையாக அகற்றி, வீராங்கல் ஓடையை முழு அளவில் தயார்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வேளச்சேரி ஏரியின் உபரி நீரும் வீராங்கல் ஓடைக்கு தான் செல்கிறது. இதுதவிர, வேளச்சேரி மற்றும் ஆதம்பாக்கத்தில் உள்ள மழைநீர் வடிகால்களும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இதனால் வீராங்கல் ஓடையின் தற்போதைய திறன் போதுமானதாக இல்லை என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதனால் தான் மிதமான மழை பெய்தாலும், தாழ்வான பகுதிகளான சரஸ்வதி நகர், ஏ.ஜி.எஸ்.காலனி, வெள்ளத்தில் மூழ்குவதாக அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், வீராங்கல் ஓடையின் பக்கவாட்டு சுவரின் உயரம் குறைவாக உள்ளதால், வெள்ளநீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்கிறது. எனவே, வீராங்கல் ஓடை வழியாக அதிக அளவில் மழைநீரை வெளியேற்றும் வகையில் ஓடையின் இருபுறம் அமைந்துள்ள பக்கவாட்டு சுவரின் உயரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை பெரிதும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு முறையும் கனமழை கொட்டி தீர்க்கும் போது வேளச்சேரி தான் முதலில் பாதிக்கப்படுகிறது.

இதற்கு தீர்வு காண்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் வீராங்கல் ஓடையின் இருபுறம் உள்ள சுற்று சுவரின் உயரத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 2.78 கிலோமீட்டர் தூரத்திற்கு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்காக ரூ.5.24 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வீராங்கல் ஓடையில் 654 கன அடி நீர் செல்லும் வகையில் அமைந்துள்ளது. இதனை சீரமைத்து 25 சதவீதம் கூடுதலாக தண்ணீரை கொண்டு செல்லும் வகையில் வழிவகை செய்யப்படுகிறது. இதில் பாயும் நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. வீராங்கல் ஓடையின் சுற்றுச்சுவரை உயர்த்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டது. இதன்மூலம் ஆதம்பாக்கம் ஏரியை ஒட்டி 1.7 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது.

சாலையின் பக்கம் 300 மீட்டர் உயரமும், மறுபக்கம் 900 மீட்டர் உயரமும் சுற்றுச்சுவர் அமைக்கப்படவுள்ளது. நீரின் அளவை கட்டுப்படுத்தும் வகையில் நான்கு இடங்களில் ஷட்டர்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சுவரின் உயரத்தை அதிகப்படுத்துவதால் ராம்நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் தப்பிக்க பெரிதும் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post வேளச்சேரியில் வெள்ள பாதிப்பை தடுக்க வீராங்கல் ஓடையின் பக்கவாட்டு சுவர் உயரத்தை அதிகரிக்க முடிவு appeared first on Dinakaran.

Related Stories: