* 2011-21 அதிமுக ஆட்சியில் நிர்வாக கோளாறு
* மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதற்கு காரணம்
சென்னை எண்ணூரில் சுமார் 238 ஏக்கர் பரப்பளவில் 1970ம் ஆண்டு முதல் 5 அலகுகள் மூலம் 450 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் செயல்பட்டு வந்த எண்ணூர் அனல்மின் நிலையம் பல்வேறு காரணங்களால் அடிக்கடி பழுதானது. மின்வாரியம் சார்பில் பல கோடி ரூபாய் செலவு செய்தும் இதை முழுமையாக சரி செய்ய முடியவில்லை. இதனால், கடந்த 2017ம் ஆண்டு இந்த அனல் மின்நிலையம் நிரந்தரமாக மூடப்பட்டது. இதனிடையே, சென்னையில் மின் தேவையை பூர்த்தி செய்ய எண்ணூரில் புதிய அனல் மின்நிலைய விரிவாக்க திட்டம் கொண்டுவர கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது திட்டமிடப்பட்டது. இதையடுத்து, சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு அனல் மின்நிலைய வளாகத்தில் 7 இடங்களில் மண் பரிசோதனை மற்றும் நீர்வள பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த அனல் மின்நிலையம் அமைய உள்ள இடம் எண்ணூர் கழிமுகம் கொசஸ்தலை ஆறு மற்றும் வங்காள விரிகுடா மத்தியில் உள்ளதால் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் இடமாக கருதப்பட்டது. இதனால் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை குறிப்பிட்டு 2018ம் ஆண்டுக்குள் புதிய அனல் மின்நிலையம் செயல்பாட்டுக்கு வர வேண்டுமென்று நிபந்தனையுடன் ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியது. அதன்படி, 238 ஏக்கர் நிலத்தில் 110 ஏக்கர் நிலத்தை புதிய விரிவாக திட்டத்திற்கு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டு ₹3960 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சிறப்பு திட்டம் தயாரித்ததை தொடர்ந்து, 26.10.2012 அன்று உலகளாவிய ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இதில் அனல் மின் நிலைய திட்ட செயல்பாட்டில் கைதேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்டன. முடிவில் ஐதராபாத்தைச் சேர்ந்த லான்கோ இன்ஃப்ராடெக் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்தத்தை எடுத்தது.
இதையடுத்து இந்த அனல் மின்நிலைய திட்டத்திற்கு அப்போதைய முதல்வர் மறைந்த ஜெயலலிதா அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இதன்படி அதிக மின் திறன், நவீன தொழில்நுட்பம் அடிப்படையில் ஒரே அலகில் 660 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய அதிநவீன மின்னலையை அமைக்கும் வகையில் பணிகள் தொடங்கின. ஆனால், பல்வேறு காரணங்களால் அடுத்த இரண்டாவது ஆண்டில் இந்த கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டது. ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணம் என அப்போது தெரிவிக்கப்பட்டது. இதனால் அனல் மின்நிலைய விரிவாக்கத்தின் துணை ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்குவது காலதாமானதால் இங்கு பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள் படிப்படியாக எண்ணூர் அனல் நிலைய விரிவாக்க பணியில் இருந்து வெளியேறியதால் பணிகளை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
கிடப்பில் போடப்பட்ட பணிகளை மீண்டும் தொடங்க மின்துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதன் காரணமாக, 14.4.2018க்குள் முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்ட எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க பணிகள் 17 சதவீதம் முடிந்த நிலையில் முற்றிலுமாக முடங்கியது. இவ்வாறு திட்டப்பணிகள் முடங்கியதற்கு அரசு தரப்பில் பல்வேறு காரணங்களை கூறினாலும், விரிவாக்க திட்டத்திற்காக ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் தகுதியானவர் அல்ல என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இதை தொடர்ந்து, திட்டத்தை டெண்டர் எடுத்த லான்கோ இன்ஃப்ராடெக் லிமிடெட் ஒப்பந்தத்தை ரத்து செய்து அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. பின்னர் முடங்கிய பணியை தொடர்ந்து செயல்படுத்த கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் மறு ஒப்பந்தம் கோரப்பட்டது.
இதில் பங்கேற்ற ஒன்றிய அரசின் பெல் நிறுவனம் ₹4,957.11 கோடிக்கும், பிஜிஆர் எனர்ஜி சிஸ்டம்ஸ் என்கிற தனியார் நிறுவனம் ₹4,442.75 கோடிக்கும் டெண்டர் கோரிய நிலையில், குறைவான தொகை குறிப்பிட்டிருந்த பிஜிஆர் நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டு. 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த பணி உத்தரவு வழங்கிய தினத்திலிருந்து 36 மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. ஆனாலும், டெண்டர் எடுத்து மூன்று மாதங்கள் ஆகியும் பி.ஜி.ஆர் எனர்ஜி சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனம் பல்வேறு காரணங்களால் பணியை துவங்கவில்லை. பணிகள் தொடர்பாக டெண்டர் எடுத்த நிறுவனத்திற்கும் மின்வாரத்துறை அதிகாரிகளுக்கும் இடையே ஆவண பரிமாற்றம் நடத்தப்பட்டதே தவிர, அனல் மின் நிலையத்திட்ட பணி தொடரவில்லை.
இதனால் இரண்டாவது முறையாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்நிலையில் டெண்டர் தொகையில் 10 சதவீதத்தை வங்கி உத்தரவாதமாக 30 நாட்களில் முழுமையாக செலுத்த வேண்டுமென்ற டெண்டர் நிபந்தனைப்படி, உத்தரவாத தொகையை 16 மாதங்களாககியும் செலுத்தவில்லை என குற்றம் சாட்டி பி.ஜி.ஆர் எனர்ஜி சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பணி உத்தரவை ரத்து செய்து 2021 ஏப்ரல் 23ம் தேதி மின் பகிர்மான கழகம் உத்தரவிட்டது. பி.ஜி.ஆர் எனர்ஜி சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஆரம்ப வைப்பு தொகையையும் திருப்பி வழங்க மறுத்தது. ஆனால் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என மின்துறை அதிகாரிகளிடம் வாதிட்ட பி.ஜி.ஆர் நிர்வாகம் இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளது. மேலும், பழைய எண்ணூர் அனல் மின்நிலையத்தின் 5 அலகுகளை பராமரிக்க 2011ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் பராமரிப்பு செலவு என்ற பெயரில் பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டதோடு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் சி.எஸ்.ஆர். நிதி பொதுமக்களுக்கு செலவிடப்பட்டதாக கூறியுள்ளனர்.
இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், புதிய எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்க திட்டம் செயல்படாமல் போனதற்கு அப்போதைய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளே காரணம் என குற்றம்சாட்டி, இதன் மூலம் அரசுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ₹2600 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரு பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் 2013-15ம் ஆண்டுகளில் மின்தேவை சராசரியாக 12,500 மெகாவாட் என கணக்கிடப்பட்டது. அனல், புனல் மற்றும் காற்றாலை என மின்சார உற்பத்திக்கு பல வழிகள் இருந்தாலும், தனியாரிடம் கொள்முதல் செய்வதிலேயே அதிமுக அரசு கவனம் செலுத்தியது. இதற்காக 2013ம் ஆண்டு 3,300 மெகாவாட் அளவுக்கு மின் கொள்முதல் செய்ய 11 தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் முழுக்க முழுக்க கொள்முதல் விதிகளை மீறியது.
அதுமட்டுமின்றி சந்தை விலையை விட மிக அதிக விலை கொடுத்து இந்த நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்கப்படுகிறது. இந்த நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் வெளி மாநிலங்களை சேர்ந்தவை. இதன் மூலம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சருக்கு பெருந்தொகை கமிஷனாக சென்று கொண்டிருந்ததாகவும், இவ்வாறு தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்குவது தடைபடாமல் இருக்கவே புதிய எண்ணூர் அனல் மின் நிலையம் மட்டுமின்றி தமிழகத்தில் பல மின்திட்டங்களை செயல்படுத்துவதில் அதிமுக அரசு சுணக்கம் காட்டியதாகவும், தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்குவதால் சுமார் 40 ஆயிரத்து 327 கோடி இழப்பு ஏற்படும் என அப்போதைய காலகட்டத்தில் பொறியாளர் அமைப்பினர் அரசை எச்சரித்தும் பயனில்லை. அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாக கோளாறும், ஊழலும் தான் இன்றுவரை மின்வாரியம் மீள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
நிதி நெருக்கடியில் தவித்த நிறுவனத்திற்கு டெண்டர்
புதிய அனல் மின் நிலைய திட்ட விரிவாக்கத்திற்கு அனுபவமிக்க எல்இடி, ரிலையன்ஸ், பெல் போன்ற நிறுவனங்களும் பிரசித்தி பெற்ற சீன நிறுவனங்களும் போட்டியிட்டன. ஆனால், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உதவிகரமாக இருந்த அப்போதைய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் தலையீட்டின் காரணமாக அவருக்கு நெருக்கமான ஐதராபாத்தைச் சேர்ந்த லான்கோ இன்ஃப்ராடெக் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும், அரசு நிறுவனங்கள் டெண்டர் எடுத்தால் கமிஷன் கிடைக்காது, என்பதற்காக அதிகமான கமிஷன் வழங்க வேண்டும் என்ற எழுதப்படாத உத்தரவாதத்தின் அடிப்படையில் லான்கோ இன்ஃப்ராடெக் நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்கப்பட்டதாகவும், ஏற்கனவே வங்கிகளில் ₹47 கோடி ரூபாய் கடன் பெற்று அதை திரும்ப செலுத்த முடியாமல் நிதி நெருக்கடியில் இருந்த இந்த நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்கப்பட்டது உள்நோக்கம் கொண்டது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி மறுப்பு
எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக திட்டம் தொடங்கப்பட்டபோது தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தடையில்லா சான்று 10 ஆண்டுகளுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும். அதற்குள் பணிகள் முடிக்கப்படவில்லை என்றால் மீண்டும் தடையில்லா சான்று பெற வேண்டும். இதன்படி மறு ஒப்பந்தம் கோரப்பட்டபோது தடையில்லா சான்று வழங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கு காரணம், புதிய எண்ணூர் அனல் மின் நிலைய திட்டம் நடைபெறும் இடத்திற்கு சுமார் 100 மீட்டர் தூரத்தில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் சுமார் 6,877 குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டம் செயல்படுத்தினால் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை காரணம் காட்டி தேசிய பசுமை தீர்ப்பாயம் தடையில்லா சான்று வழங்க மறுப்பு தெரிவித்து விட்டது. தடையில்லா சான்று பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்ற புரிதல் இல்லாமல் மின்வாரிய பகிர்மான அதிகாரிகள் மறு டெண்டர் விட்டார்களா அல்லது எதிர்கட்சிகளில் வாயை அடைக்க தெரிந்தே மறு டெண்டர் விட்டார்களா என்ற கேள்வியும் எழுந்தது.
The post எண்ணூரில் ரூ3,960 கோடியிலான புதிய அனல்மின் நிலைய விரிவாக்க திட்டம் தோல்வியால் ரூ4,442.75 கோடி இழப்பு appeared first on Dinakaran.