×

கண்ணாடி பார்க்கும் ராணி… பவனி வரும் மன்னர்… சேதுபதி அரண்மனைக்கு சிறப்பு சேர்க்கும் ஓவியங்கள்: கண்டு வியந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்

ராமநாதபுரம்: உலக மரபு வாரவிழாவையொட்டி, ராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் சிறப்பு சேர்க்கும் ஓவியங்களை அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் கண்டு வியந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலை பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவ, மாணவிகள் 25 பேர் உலக மரபு வார விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனையை பார்வையிட்டனர். ஓவியங்களின் தொழில்நுட்பம், அழகிய பெரிய தெய்வ உருவங்கள், கட்டமிட்டு உருவாக்கிய ராமாயண, பாகவத காட்சிகள், அதன்கீழ் எழுதப்பட்ட விவரங்கள், அரண்மனை அமைப்பு, சுரங்கம், உப்பரிகை, இளவட்டக்கல், வளரி உள்ளிட்ட ஆயுதங்கள் போன்றவற்றை கண்டு மாணவர்கள் பிரமித்தனர்.

அரண்மனை, அதன் ஓவிய சிறப்பு பற்றி தொன்மை பாதுகாப்பு மன்ற செயலர் ராஜகுரு கூறுகையில்,
‘தென்னிந்தியாவிலேயே முழுவதும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரே அரண்மனையான இது கிழவன் சேதுபதியால் கட்டப்பட்டது. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என ஒரு கோயில் போன்ற அமைப்பில் அரண்மனை உள்ளது. மகாமண்டபத்தில் உள்ள சுண்ணாம்பு, செங்கலால் கட்டப்பட்ட தூண்கள், மதுரை நாயக்கர் மகால் தூண்கள் போன்று சிறிய அளவில் உள்ளன. அர்த்தமண்டபத்தில் 20, கருவறையில் 12 என 32 வழுவழுப்பாக தேய்க்கப்பட்ட அழகிய கருங்கல் தூண்கள் உள்ளன. மகாமண்டபத்தின் தென்மேற்கு மூலையில் சேதுபதிகள் பட்டம் சூட்டிக்கொள்ளும் அபிஷேக மேடை உள்ளது. இயற்கையான மூலிகை வண்ணத்தில் உருவான அரண்மனையிலுள்ள ஓவியங்கள் 350 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

ராமாயண, பாகவத காட்சிகள், சேதுபதிகள் வணங்கிய தெய்வங்களின் உருவங்கள், தஞ்சை மராட்டியர்களுடன் போர்க்காட்சிகள், மன்னர் பவனி வருதல், பலவகையான மதுக்குடுவைகள், பெண்களைக் கொண்டு உருவாக்கிய யானை, குதிரை உருவங்கள், கண்ணாடி பார்க்கும் ராணி ஆகிய சிறப்புமிக்க ஓவியங்கள் உள்ளன. இவை திருவுடையத்தேவர் என்ற முத்துவிஜய ரகுநாத சேதுபதி காலத்தில் வரையப்பட்டவை. ஓவியங்களில் உள்ள மன்னராக அவரே காணப்படுகிறார். ஓவியங்களில் சிவப்பு, கறுப்பு, பச்சை, நீலம் ஆகிய வண்ணங்களும் அவற்றை ஒன்றுடன் ஒன்று கலந்த வண்ணங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. நாயக்க மன்னர்களின் கலைப்பாணியை பின்பற்றியே சேதுபதிகளின் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன’ என்றார்.

The post கண்ணாடி பார்க்கும் ராணி… பவனி வரும் மன்னர்… சேதுபதி அரண்மனைக்கு சிறப்பு சேர்க்கும் ஓவியங்கள்: கண்டு வியந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் appeared first on Dinakaran.

Tags : Queen ,Bhavani ,Sethupathi Palace ,Ramanathapuram ,World Heritage Week ,Antiquities Conservation Council ,Suresh Sudha Alaghan Memorial Government Higher Secondary School ,Tirupullani ,
× RELATED சில்க் ஸ்மிதா வாழ்க்கை தமிழில் படமாகிறது