கடலூர்: கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். கனமழை கொட்டி தீர்த்த கடலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் கடும் பனிப்பொழிவு நிலவியது. பனிப்பொழிவு காரணமாக சாலையில் எதிரே வருபவர்கள் தெரியாத அளவிற்கு புகை மூட்டம் போல காட்சி அளித்தது. கடும் குளிரும் நிலவியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.
காலை சூரியன் உதிப்பது கூட தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு இருந்ததால் சாலையில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. கொடைக்கானலில் அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் நிலவியது. அவ்வப்போது பலத்த மழையும் பெய்வதோடு கடும் குளிரும் வாட்டி வதைக்கிறது. இதனால் அங்குள்ள மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். கடும் பனிபொழிவு காரணமாக கொடைக்கானலில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் பனிமூட்டம் போன்று மோசமான வானிலை தோன்றும் சமயங்களிலும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
The post தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு: சிரமத்திற்கு உள்ளான வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.