வேலூர், டிச.3: வேலூர் மாவட்டத்தில் நேற்று முதல் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் முக்கிய இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். வேலூர் மாவட்டத்தில் டிசம்பர் 1ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் என்று காவல்துறை அறிவித்திருந்தது. மேலும் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ₹1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் பெஞ்சல் புயல் மழை காரணமாக நேற்று 1ம் தேதி மாவட்டத்தில் எங்கும் காவல்துறை ஹெல்மெட் கட்டாய விதியை கண்காணிக்காமல் தவிர்த்தனர். அதே நேரத்தில் புயல் மழை காரணமாக ஹெல்மெட் சோதனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்டம் முழுவதும் தகவல் பரவியது.
ஆனால் நேற்று காலை டிசம்பர் 2ம் தேதி முதல் வேலூர் மாவட்டத்தில் இதற்காக தனி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் ஏஎன்பிஆர் கேமரா எனப்படும் ஆட்டோமேடிக் நம்பர் பிளேட் ரெககனைஸ் கேமரா மூலம் போட்டோ எடுக்கப்பட்டு அதன் மூலம் அபராதம் விதிக்கும் பணியும் நடந்தது. வேலூரில் வேலூர் செல்லியம்மன் கோயில், புதிய பஸ் நிலையம், அருகிலும் காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம், குடியாத்தம் கூட்ரோடு, அண்ணா சாலை என முக்கிய இடங்களில் வாகன சோதனை நடந்து வருகிறது. இதில் ஹெல்மட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ₹1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதுகுறித்து எஸ்பி மதிவாணனிடம் கேட்டபோது, ‘ஹெல்மெட் கட்டாயம் என்ற விதி (இன்று) நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்காக தனி டீம்கள் அமைக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தார்.
The post வேலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்: முக்கிய இடங்களில் போலீசார் சோதனை appeared first on Dinakaran.