2026 சட்டசபை தேர்தல் பாஜவுக்கு வாழ்வா, சாவா தேர்தல்: அண்ணாமலை பேட்டி

சென்னை: சட்டசபை தேர்தல் என்பது பாஜவுக்கு வாழ்வா? சாவா? என்பதை நிருபிக்கும் தேர்தல் என அண்ணாமலை கூறினார். சர்வதேச அரசியல் படிப்பு படிக்க லண்டன் சென்றிருந்த பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று முன்தினம் பிற்பகல் சென்னை திரும்பினார். அவருக்கு பாஜ சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பதிவாகி உள்ளது. எனவே, பாஜ தொண்டர்கள் நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்திடும் வகையில் களத்தில் பணியாற்ற வேண்டும். விழுப்புரம் உள்பட மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளேன். மழை வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கும், மத்திய பாஜ தலைமைக்கும் தெரிவிக்க உள்ளோம்.

தமிழகத்தில் பாஜ உறுப்பினர் சேர்க்கை 8 மடங்கு அதிகரித்திருக்கிறது. அரசியல் களத்தை பொறுத்தவரையில், நாம் கடுமையாக உழைக்க வேண்டும். 2026 சட்டசபை தேர்தல் நமக்கு வாழ்வா, சாவா என்கிற தேர்தலாகும். மூத்த தலைவர் எச்.ராஜா சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பதிவு தொடர்பாக கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜவை பொறுத்தவரை எச்.ராஜாவுக்கு எப்போதும் துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார். இதனைத் தொடர்ந்து, பாஜ மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட பார்வையாளர்கள், தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

பாஜ தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், மாநில தலைவர் அண்ணாமலை, தெலங்கானா மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், சட்டசபை கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம், சக்கரவர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

The post 2026 சட்டசபை தேர்தல் பாஜவுக்கு வாழ்வா, சாவா தேர்தல்: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: