கோமுகி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 6000 கனஅடி நீர் வெளியேற்றம்

 

சின்னசேலம், டிச. 2: கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் கோமுகி அணையின் நீர்மட்டம் 46 அடியாக இருந்தபோதிலும் கரைகளின் பாதுகாப்பு கருதி 44 அடி மட்டுமே சேமிப்பது வழக்கம். கோமுகி அணை நிரம்பிய நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி சம்பா பருவ சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டது. மேலும் நேற்றுவரை கோமுகி ஆற்றில் வினாடிக்கு 120 கனஅடியும், புதிய பாசன கால்வாயில் வினாடிக்கு 100 கனஅடி நீரும் பாசனத்திற்கு திறந்துவிடப்பட உள்ளது.

இந்நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக கல்வராயன்மலைப்பகுதியில் கனமழை பெய்து வந்தது. மேலும் நேற்று அதிகாலை 5 மணிவரையில் அணைக்கு வினாடிக்கு 300 கனஅடி நீர்மட்டுமே வந்து கொண்டிருந்தது. ஆனால் நேற்று காலை சுமார் 7 மணி அளவில் திடீரென்று அணைக்கு வரும் நீர் வினாடிக்கு 1000 கனஅடியாக அதிகரித்தது. அதன்பின் 11.30 மணியளவில் வினாடிக்கு 4000 கனஅடியாக அதிகரித்தது.

இதனால் கரைகளின் பாதுகாப்பு கருதி அணையில் 44 அடி நீரை தேக்கி வைத்துக்கொண்டு உபரி நீர் வினாடிக்கு 4000 கனஅடி கோமுகி ஆற்றில் அணையின் பிரதான ஷெட்டர் வழியாக திறந்து விட்டனர். மதியம் 1 மணியளவில் கல்வராயன்மலை ஆறுகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து வினாடிக்கு 6000 கனஅடி நீரை திறந்து விட்டனர்.

கோமுகி ஆற்றில் நீரை திறந்து விடுவதற்கு முன்பாக வடக்கநந்தல், கச்சிராயபாளையம், மேட்டுப்பாளையம், அக்கராயபாளையம், ஏர்வாய்பட்டிணம், சடையம்பட்டு, மட்டிகைகுறிச்சி, சோமாண்டார்குடி உள்ளிட்ட கரையோர மக்களின் பாதுகாப்பு கருதி அபாய சங்கு ஒலிக்கப்பட்டு தண்ணீர் திறந்து விட்டனர். தற்போது கோமுகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றங்கரை பாலங்களில் நின்று பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

The post கோமுகி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 6000 கனஅடி நீர் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: