நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் ரேஷன் கடை விற்பனையாளர், கட்டுனர் பணிக்கு நடைபெற்ற நேர்முக தேர்வில் கைக்குழந்தையுடன் பெண்கள் பங்கேற்றனர். கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் தமிழ்நாடு முழுவதும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் 3 ஆயிரத்து 308 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப தமிழ்நாடு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் மொத்தம் 35 விற்பனையாளர், 6 கட்டுனர் என்று மொத்தம் 41 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் விற்பனையாளர் பணிக்கு 5200 பேரும், கட்டுனர் பணிக்கு 789 பேரும் என்று மொத்தம் 5989 பேர் விண்ணப்பித்துள்ளனர். நேர்முக தேர்வு நாகர்கோவில் மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று முன்தினம் தொடங்கியது.
தினமும் காலை 500 பேருக்கும், பிற்பகல் 500 பேருக்கும் என்று நேர்முக தேர்வு நடத்த அழைப்பு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு அதற்கேற்ப தேர்வு நடைபெறுகிறது. இந்த நேர்முக தேர்வு டிசம்பர் 3ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பட்டதாரிகள் உள்ளிட்டோரும் விண்ணப்பித்துள்ளனர். பலர் கைக்குழந்தையுடன் வந்து நேர்முக தேர்வில் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நேர்முக தேர்வில் நேற்று காலையில் தேங்காப்பட்டணத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது 9 மாத கைக்குழந்தையுடன் வந்து பங்கேற்றார். கைக்குழந்தையை வெளியே தனது உறவினர்களிடம் விட்டுச்சென்ற நிலையில் குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்தது. குழந்தையின் தந்தை உள்ளிட்டோர் சமாதானப்படுத்தியும் குழந்தையை இயல்பு நிலைக்கு கொண்டுவர முடியவில்லை. இதனை தொடர்ந்து தாயார் நேர்முக தேர்வுக்கு சென்ற அறையை அங்கிருந்த போலீசார் தேட தொடங்கினர்.
அதற்குள் நேர்முக தேர்வு முடிந்து தாய் வெளியே வந்தார். அவரை பார்த்த பின்னரே குழந்தை இயல்புநிலைக்கு திரும்பியது. நேற்று மதியம் 12.30 மணிக்கு பின்னர் காலையில் நேர்முக தேர்வுக்கு பங்கேற்க வந்தவர்களை பிற்பகல் பங்கேற்க அலுவலர்கள் அறிவுறுத்தினர். தொடர்ந்து மாலை 5 மணி வரை நேர்முக தேர்வு நடந்தது.
The post குமரி மாவட்டத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு கைக்குழந்தையுடன் பங்கேற்ற பெண்கள் appeared first on Dinakaran.