- அமைச்சர்
- கல்வி
- அரிசோனா காலனி
- நாமக்கல்
- பஞ்சாயத்து யூனியன் முதன்மை பள்ளி
- அரிசன் காலனி
- மல்லசமுத்திரம்
- தின மலர்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அரிசன் காலனி என்ற பெயரில் 60 ஆண்டாக செயல்பட்டு வருகிறது. 2 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 10 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அரிசன் காலனி என்ற பெயரை மாற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அந்த பள்ளியின் பெயரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு என மாற்றி அரசாணை வெளியிட்டார்.
இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில், அமைச்சர் அன்பில் மகேஸ் அந்த பள்ளிக்கு திடீரென சென்று பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்ற வார்த்தையை கருப்பு பெயின்டால் அவரே அழித்தார். பின்னர் அங்குள்ள கிராம மக்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார். ‘ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான அரசாணையை பள்ளியின் தலைமை ஆசிரியை ஜமுனாராணியிடம் அமைச்சர் வழங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உடன் இருந்தார்.
பள்ளியின் பெயரை மாற்றம் செய்ய தொடர்ந்து போராடிய ஊர் பெரியவர் கணேசனுக்கு சால்வை அணிவித்தார். அரசின் பார்வைக்கு இதை எடுத்து சென்ற வக்கீல் அன்பழகனை பாராட்டினார். ஊர்மக்களும், ஆசிரியர்களும் ஒன்று கூடி தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற நேரடியாக வந்த அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
இது குறித்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ‘கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’ என கலைஞரின் வரிகளை கோடிட்டு காட்டியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில், சமத்துவச் சமுதாயத்தை நோக்கிய நமது பயணத்துக்குத் துணையாக வரும் பெரியவர் கணேசன், வழக்கறிஞர் அன்பழகன் போன்றோர் போற்றுதலுக்குரியவர்கள் என தெரிவித்துள்ளார்.
The post பள்ளிக்கூட பலகையில் அரிசன் காலனி பெயரை அழித்த கல்வி அமைச்சர் appeared first on Dinakaran.