×
Saravana Stores

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் திராவிட மாடல் அரசு அமைய உறுதி ஏற்போம்: திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வேண்டுகோள்

சென்னை: நாம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை தொடங்கி விட்டோம். தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலினின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு மீண்டும் அமைவதற்கான உறுதியை இந்தப் பிறந்தநாளில் என்னுடன் சேர்ந்து திமுகவினரும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:

வருகிற நவம்பர் 27ம் தேதி (நாளை) என் பிறந்தநாள் வருவதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். இளைஞர் அணிச் செயல்வீரர்கள் உள்ளிட்ட திமுக தோழர்களும், என்னைத் தங்கள் வீட்டுப்பிள்ளையாகக் கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்களும் காட்டும் பேரன்பும் ஆதரவுமே என் பிறந்தநாளைச் சிறப்பான நாளாக மாற்றியிருக்கிறது. நமது திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையும் கொள்கைத் திருவிழாவாகவே நம் கழகத்தோழர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அந்தவகையில், என் பிறந்தநாளைக் கொண்டாட விரும்பும் திமுக தோழர்களும் அதை ஆக்கப்பூர்வமான மக்கள் பணிக்கும் கட்சிப்பணிக்கும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே, என் விருப்பம். முன்பே சொன்னதுபோல், திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும் நம் திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் மக்களிடம் எடுத்து செல்லும் நிகழ்வுகளை நடத்துவதில், திமுக தோழர்கள் முனைப்புக் காட்ட வேண்டும்.

அதேபோல் நம் திமுகவின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட, போற்றுதலுக்குரிய நம் திமுக முன்னோடிகளை நேரில் கண்டு அவர்களை உரிய வகையில் கௌரவிக்க வேண்டும் என்று, நம் இளைஞர் அணித் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறேன். `ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்ற அண்ணாவின் வார்த்தைகளுக்கு ஏற்ப, ஏழை அடித்தட்டு மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வுகளையும் திமுக தோழர்கள் நடத்த வேண்டும்.

ஏற்கெனவே, நம் திராவிட மாடல் அரசால் பலன் பெறும் அடித்தட்டு மக்களுக்கு அத்தகைய உதவிகள் மேலும் பலம் சேர்க்கும் என்பதால், அத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவதில் திமுக தோழர்கள் முனைப்புக் காட்டவேண்டும் என்பதே என் விருப்பம். அதேபோல் பெருமழை மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் பாதிக்கப்படும் சூழல் வந்தால் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் இளைஞர் அணி செயல்வீரர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக ஒரு விஷயத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். என் பிறந்தநாளை முன்னிட்டு, ப்ளெக்ஸ் பேனர்கள் வைப்பதையும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகள் வெடிப்பதையும் திமுக தோழர்கள் முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்று, உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கவே, விழி பிதுங்கிக்கொண்டிருக்கும்போது நாம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளைத் தொடங்கி விட்டோம். 2026ல் வெற்றிபெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான `திராவிட மாடல்’ அரசு மீண்டும் அமைவதற்கான உறுதியை இந்தப் பிறந்தநாளில் என்னுடன் சேர்ந்து கழகத்தோழர்களும் ஏற்றுக்கொள்ளுங்கள். இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் திராவிட மாடல் அரசு அமைய உறுதி ஏற்போம்: திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : 2026 assembly elections ,Dravidian model ,Udhayanidhi Stalin ,DMK ,CHENNAI ,Udayanidhi Stalin ,M.K.Stalin ,Dravida model government ,Dinakaran ,
× RELATED நெல்லை, கும்பகோணம், கன்னியாகுமரியைத்...