பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியிலிருந்து மோதிராபுரம் செல்லும் வழியில் இறைச்சிக்கழிவுகள் கொட்டி செல்வதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.
பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதி குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது, வால்பாறை ரோட்டில் ஒன்று சேர்ந்து மோதிராபுரம் கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள பெரிய சாக்கடை கால்வாயில் கலக்கிறது.
இதனால், அவ்வப்போது அந்த சாக்கடையை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி நடைபெறுகிறது.ஆனால், தற்போது சாக்கடை கால்வாயின் நடுவே புதர்கள் சூழ்ந்திருப்பதுடன், ஆங்காங்கே கழிவு பொருட்கள் கொட்டும் இடமாக மாறி வருகிறது. இதனால், தூர்நாற்றம் வீசுதுவதுடன் கொசு உற்பத்தி அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. சாக்கடையில் கழிவு பொருட்கள் தேங்கி புதர்கள் சூழ்ந்துள்ளது. மேலும், இந்த ரோடு இறைச்சிக்கழிவுகள் கொட்டும் இடமாக மாறி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கழிவுகளை நாய் உள்ளிட்ட கால்நடைகள் நுகர்ந்து செல்வதுடன் சிதறி போட்டு செல்கிறது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர்.எனவே, மோதிராபுரம் ரோட்டில் இறைச்சிக்கழிவுகளை கொட்டி செல்வதை கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலரும், கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மோதிராபுரம் ரோட்டில் இறைச்சிக்கழிவுகள் கொட்டுவதால் மக்கள் வேதனை appeared first on Dinakaran.