பெரம்பூர்: காற்றாடி மாஞ்சா நூல் அறுத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலியானார்கள். இதன் காரணமாக கடந்த 2016ம் ஆண்டு மாஞ்சா நூல் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்ததுடன் மாஞ்சா நூல் விற்பனையில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு வியாசர்பாடி மேம்பாலம் அருகே பைக்கில் தந்தையுடன் சென்ற இரண்டரை வயது குழந்தை மற்றும் ராயபுரத்தை சேர்ந்த ஜிலானி பாஷா ஆகியோர் மாஞ்சா நூல் அறுத்து படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். இதைத் தொடர்ந்து வியாசர்பாடி, புளியந்தோப்பு, பேசின்பிரிட்ஜ் மற்றும் ஓட்டேரி பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தி 25க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் வழியாக காற்றாடி, மாஞ்சா நூல் ஆர்டர் செய்து வாங்கியது தெரிந்தது.
இதுசம்பந்தமாக தீவிர விசாரணை நடத்தப்பட்டபோது பெங்களூருவை சேர்ந்த சிலருடன் காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் வாங்கி விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து காற்றாடி, மாஞ்சா நூல் மொத்த வியாபாரிகளை கைது செய்யவேண்டும் என்று சென்னை மாநகர கமிஷனர் அருண் உத்தரவிட்டார். இதையடுத்து புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் மேற்பார்வையில், புளியந்தோப்பு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் சமூகவலைதளங்களில் காற்றாடி விற்பவர்களை கண்காணித்தனர்.
அப்போது சென்னை அருகே உள்ள அயப்பாக்கம் ஆஞ்சநேயர் நகர் பகுதியை சேர்ந்த முகமது பாசில் (25) என்பவர் பெங்களூருவில் இருந்து காற்றாடிகளை மொத்தமாக வாங்கிவந்து சென்னையில் தொடர்ந்து விற்று வருவது தெரியவந்தது. அவரை தேடியபோது முகமது பாசில் தனது சமூகவலைத்தள பக்கம் அனைத்தையும் முடக்கிவிட்டு இன்ஸ்டாகிராமில் இனியாரும் காற்றாடி சம்பந்தமாக தன்ைன தொடர்புகொள்ளாதீர்கள் என கூறிவிட்டு செல்போனை ஆப் செய்துவிட்டு பெங்களூருக்கு தப்பிச்சென்றது தெரிந்தது. பெங்களூரு விரைந்த போலீசார் அங்கு முகமது பாசிலை அவரது உறவினர் பெங்களூர் விவேக் நகர் பஜார் தெரு பகுதியில் உள்ள மன்சூர் (37) என்பவர் வீட்டில் வைத்து கைது செய்தனர்.
மன்சூரும் சமூகவலைதளங்கள் மூலம் காற்றாடி விற்பனை செய்துள்ளார். அவரது வீட்டில் இருந்து 6500 காற்றாடிகள், 200க்கும் மேற்பட்ட மாஞ்சா நூல் லோட்டாய்கள், 50 ஆயிரம் மதிப்புள்ள காற்றாடி செய்ய பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன்பிறகு மன்சூர், முகமது பாசில் ஆகியோரிடம் விசாரணை நடத்தி, பெங்களூரு சம்பந்தம் நகர் பகுதியை சேர்ந்த இம்ரான் (33) கைது செய்தனர். இவரும் சமூகவலைதளம் மூலம் காற்றாடி விற்பனை செய்துள்ளார்.
மன்சூர், பெங்களூரு சிவாஜிநகர் பகுதியில் காற்றாடி, மாஞ்சா நூல் உள்ளிட்டவற்றை மொத்தமாக விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். முகமது பாசில், சென்னையில் தங்கியிருந்து மன்சூரிடமிருந்து மொத்தமாக காற்றாடி, மாஞ்சா நூல்கள் வாங்கி விற்பனை செய்துள்ளார். மேலும் இவர் எப்பி கிட்டீஸ் என்ற பெயரில் முகநூலில் மாஞ்சா நூல், காற்றாடி வியாபாரம் செய்துள்ளார். இம்ரான், பெங்களூரு சிவாஜி நகரில் காற்றாடி மொத்த வியாபாரம் செய்துள்ளார். இதையடுத்து 3 பேரையும் வியாசர்பாடி காவல் நிலைய அழைத்துவந்த விசாரிக்கின்றனர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 6500 காற்றாடிகள், 200க்கும் மேற்பட்ட மஞ்சா நூல் லேட்டாய்கள், மாஞ்சா நூல் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
The post சமூகவலைதளம் மூலம் காற்றாடி விற்பனை; பெங்களூரூவில் வியாபாரிகள் 3 பேர் கைது: 6500 காற்றாடி, 200 மாஞ்சா நூல் பறிமுதல் appeared first on Dinakaran.